இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று (09.01.2023) ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக முதல்வர் உரையாற்றிக்கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது.
இந்நிலையில் சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னசாமி, தில்லை காந்தி, துரை கோவிந்தராஜன், சோமசுந்தரம் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதேபோல் வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழறிஞர் அவ்வை நடராசன், ஓவியர் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், கால்பந்து வீரர் பீலே, எம்எல்ஏ திருமகன் ஈவேரா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.