
வடசென்னையின் கொடுங்கையூரில் குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணுவுலைக்கு எதிர்ப்பு, நியூட்ரினோ திட்டத்தை நிறுத்திவைப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டங்களில் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அயராது குரல்கொடுத்துவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், வடசென்னை கொடுங்கையூர் பகுதியில் முன்னெடுக்கப்படும் குப்பை எரிவுலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிட தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
சென்னை மாநகரத்தில் உருவாகும் திடக்கழிவுகளை எரித்து அழிக்க, சென்னை மாநகராட்சியானது வடசென்னையின் கொடுங்கையூரில் ஒரு குப்பை எரிவுலையை அமைக்கவிருப்பதாக அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. இத்திட்டம் சுற்றுச்சூழலையும் மக்களின் உடல் நலனையும் வாழ்வாதாரங்களையும் கடுமையாக பாதிக்கக் கூடியதாக இருப்பதால் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் அப்பகுதி பொதுமக்களும் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.
குப்பை எரிவுலைகள், குப்பைகளை அழிப்பதற்கான தீர்வுகளாக ஒருகாலத்தில் கருதப்பட்டாலும், அவற்றை அன்று முன்னெடுத்த மேற்கத்திய நாடுகள், தங்கள் குப்பை எரிவுலைகளை மூடத் தொடங்கியிருப்பதோடு, புதிய எரிவுலைகளை நிறுவுவதையும் தவிர்க்கின்றன. குப்பை எரிவுலைகள், கழிவுகளை அழிப்பதில்லை; மாறாக, அவற்றைக் கடுமையான நச்சுச் சாம்பலாகவும், வாயுக்களாகவும் மாற்றுகின்றன. சமீபத்தில், மணலி அருகேயுள்ள சின்னமாத்தூரில் செயல்பட்டு வந்த ஒரு குப்பை எரிவுலையின் அருகாமையில் செய்யப்பட்ட ஆய்வில், கன உலோக நச்சுக்கள் WHO அனுமதித்த அளவைவிட 25 மடங்கிற்கும் மேல் கண்டறியப்பட்டிருப்பதே, இவற்றின் சாம்பல் எத்தனை ஆபத்தானது என்பதையும், கையாள இயலாதது என்பதையும் உணர்த்தப் போதுமானது.
குப்பை எரிவுலைகளிலிருந்து வெளிவரும் வாயுக்களில் டையாக்ஸின்கள், ஃப்யூரான்கள் உள்ளிட்ட பல்வேறு நச்சு வாயுக்கள் வெளியாவது தடுக்க முடியாதது. இவை புற்றுநோய் உள்ளிட்ட தீவிர உடல்நலக் கோளாறுகளை உருவாக்கக் கூடியவை. டெல்லியில் செயல்பட்டு வரும் ஒரு குப்பை எரிவுலையானது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாக இந்த நச்சு வாயுக்களை வெளியேற்றியதற்காக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது. இந்த உலையின் சாம்பல் கொட்டப்படும் இடங்களுக்கு அருகே அதிகரிக்கும் கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளை, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை புலனாய்வு செய்து வெளியிட்ட செய்தியானது, சென்ற ஆண்டு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
குப்பை எரிவுலைகளிலிருந்து பெறப்படும் மின்சாரம் பசுமையானது அல்ல; அவற்றின் கார்பன் உமிழ்வு நிலக்கரியைவிட அதிகம். கார்பன் உமிழ்வைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, நிலக்கரியைவிட மிக மோசமான குப்பை எரிவுலைகளிலிருந்து மின்சாரம் பெறும் திட்டங்களை முன்னெடுப்பது, அதன் காலநிலை மாற்ற செயல்பாடுகளுக்கு முரணானது. மேலும், நாற்பதுக்கும் மேற்பட்ட சிவப்புப் பட்டியல் தொழிற்சாலைகள் செயல்படும், உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் வடசென்னையில், கூடுதலாக இன்னொரு சிவப்புப் பட்டியல் திட்டத்தைக் கொண்டு வருவது, தமிழ்நாடு அரசின் சமூக நீதி விழுமியங்களுக்கும் முரணானது.
குப்பை எரிவுலைகள், மிக அதிக செலவு பிடிக்கக் கூடியவை என்பதோடு, குப்பையைக் கையாளும் மறுசுழற்சி, மட்கச் செய்தல் போன்றவற்றுக்கான உட்கட்டமைப்புகளை அழிக்கக் கூடியவை. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள்தான் இனி வரும் நமது சமூகப் பொருளாதார அரசியலை வடிவமைக்க இருக்கின்றன என்ற சூழலில், குப்பை எரிவுலைகள் போன்ற திட்டங்களை முன்னிறுத்துவது சரியான தீர்வாக அமையாது.
பாரிஸ் ஆய்வுப் பயணத்திற்குப் பிறகு, சென்னை மாநகராட்சி கொடுங்கையூரில் குப்பை எரிவுலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது.
பாரிஸ் நகரில் இயங்கி வரும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு, அந்நாட்டின் குப்பை எரிவுலை குறித்து விரிவான அறிக்கையை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையர், மேயர் மற்றும் அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளது. அதில், பல்வேறு ஆபத்துகளை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டியுள்ளதை குறிப்பிட்டு, தி ஹிந்து (The Hindu) நாளிதழ் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளதை, இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்நிலையில், இங்கும் அதே மாதிரியான குப்பை எரிவுலையைத் திறப்பது, எவ்வகையிலும் உகந்தது அல்ல என்று வலியுறுத்துகிறேன்.
ஆகவே, கையாள முடியாத நச்சுக் கழிவுகளை உருவாக்கும் குப்பை எரிவுலைத் திட்டத்தைக் கைவிட்டு, குப்பைகளை அவற்றின் உற்பத்தியிலேயே கட்டுப்படுத்துவது, திடக்கழிவுகளை முழுமையாக வகைபிரித்துப் பெறுவது, மட்கும் கழிவுகளை முழுமையாக மட்கச் செய்வது, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை வகைபிரித்து மறுசுழற்சி செய்வது, இவை அனைத்துக்குமான உட்கட்டமைப்புகளை அதிகரிப்பது போன்ற, சூழலுக்குப் பாதுகாப்பான, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், செலவு குறைந்த மாற்று வழிகளைப் பரிசீலிக்க, தமிழ்நாடு அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
வடசென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இத்தகைய குப்பை எரிவுலைகளை அரசு கொண்டு வரக்கூடாது என்றும், இதனை அரசு கொள்கை முடிவாக எடுக்க வேண்டுமென்றும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறேன். மிழ்நாட்டை பசுமை மாநிலமாக மாற்றும் பல்வேறு திட்டங்களை உருவாக்கும் தமிழ்நாடு அரசு இதுபோன்ற நச்சு ஆலைக்கு இடம்தராது என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.