
கர்நாடக மாநிலத்தில் குற்றவியல் மற்றும் வகுப்புவாத வன்முறைகளைச் சமாளிக்க காவல் துறைக்குள் ஒரு சிறப்பு வகுப்புவாத எதிர்ப்புப் படையை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுஹாஸ் ஷெட்டி. இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தளம் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். இவர் மீது 5 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, மங்களூரு பகுதியில் காரில் பயணித்த ஷெட்டியை, இரண்டு வாகனங்கள் வழிமறித்துள்ளது. அந்த வாகனங்களில் இருந்து இறங்கி 6 பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஷெட்டியை கொடூரமாக வெட்டி தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த ஷெட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுஹாஸ் ஷெட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வகுப்புவாத வன்முறைகளை தடுப்பதற்கு காவல்துறைக்குள் ஒரு சிறப்பு வகுப்புவாத எதிர்ப்புப் படையை கர்நாடகா அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடலோர கர்நாடக மாவட்டங்களில் எந்தவொரு குற்றவியல் வன்முறையையும் ஒழிக்க, நக்சல் எதிர்ப்புப் படையைப் போலவே ஒரு வகுப்புவாத எதிர்ப்புப் படையை உருவாக்குவதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. பெரும்பாலும் வகுப்புவாத மோதல்களுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக் காவல் பணி சம்பவங்களும் இந்த புதிய படையின் கீழ் கொண்டுவரப்படும்” என்று கூறினார். பஜ்ரங் தள உறுப்பினர் சுஹாஸ் ஷெட்டியின் சமீபத்திய கொலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.