Skip to main content

அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்கக் கோரி ஆலங்குடி தாலுகா அலுவலம் முற்றுகை...

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
aalangudi taluka



புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில்  உள்ளது மாஞ்சன்விடுதி ஊராட்சி மழவராயன்பட்டி கிராமம். அங்கு சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், கஜா புயலின் கோரதாண்டவத்தால் இப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளையும்,  உடமைகளையும் இழந்துள்ளனர்.  மேலும், இப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து நிவாரணம் கோரி மனு கொடுத்துள்ளனர். ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களுக்கு வழங்க வேண்டி அரசு நிவாரணம் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட விஏஓ அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது,  நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று சமாதானம் செய்து காலம் கடத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
 


இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று திங்கள் கிழமை ஆலங்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து அலுவலகம் முன்பு உள்ள ஆலமரத்தடியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் வருவாய் ஆய்வாளர்கள் வினோதினி, ரெங்கராஜன்,  ஆலங்குடி போலீசார்  ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு உடனடியாக அரசு நிவாரண பொருட்கள் வழங்கவும், நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  இதனைத் தொடர்ந்து, முறையாக அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கவும், பழுதடைந்த வீடுகளுக்கான நிவாரணத்தொகையை வங்கி கணக்குகளில் வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும்  என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து,  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஒவ்வொரு நாளும் நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அதிகாரிகள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவிக்கின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்