கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்தவர் கவிதா. இவர் கடந்த 12ஆம் தேதி சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் அதிவிரைவு ரயிலில் ஏறி மதியம் சுமார் 12 மணியளவில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். ரயிலை விட்டு இறங்கிய அவர், தான் கொண்டு வந்த கைப்பையை மறந்து ரயிலிலேயே தவறவிட்டுள்ளார். பதறிப்போன கவிதா பெண்ணாடம் ரயில்வே நிலைய அதிகாரியிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக விருத்தாசலம் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக விருத்தாசலம் போலீசார் அரியலூர் பகுதி ரயில்வே காவல்துறை துணை ஆய்வாளர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக விரைந்து சென்று அரியலூரில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நின்றதும், கவிதா பயணம் செய்த பெட்டியில் ஏறி அவர் மறந்து ரயிலில் தவறவிட்ட பையைப் பத்திரமாகக் கைப்பற்றினார். அதில் கவிதா வைத்திருந்த இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்கச் செயின் 2000 பணம் ஆகியவை அப்படியே பத்திரமாக இருந்துள்ளன.
அதை மீட்ட சிவகுமார் கவிதாவை வரவழைத்து அவர் வைத்திருந்த பொருட்கள் விவரம் கேட்டு அவை சரியாக இருந்ததையடுத்து கவிதாவிடம் பையோடு ஒப்படைத்தார். கவிதா கண்ணீர் மல்க காவல் துணை ஆய்வாளர் சிவக்குமார் உட்பட விரைந்து செயல்பட்டு உதவி செய்த காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி கூறினார். ரயில் பயணி தவறவிட்ட பையை உடனடியாக மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.