திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த அப்துல் கனி பாட்சா (எ) ஏபிஎல் பர்வீன் கனி என்பவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர்கள், தங்களை எல்ஐசி ஊழியர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு பேசியுள்ளனர். அப்போது பர்வீன் கனியின் எல்ஐசி பாலிசி முதிர்வடைந்துவிட்டதாகவும் அதனை மத்திய அரசின் சில திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். மத்திய அரசின் திட்டம் என்பதால் அதனை நம்பிய பர்வீன் கனி, படிப்படியாக 86 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பர்வீன் கனி, இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். இந்த வழக்கு விசாரணையானது சி.பி.சி.ஐ.டி பிரிவிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி பெரம்பலுார் இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, எஸ்எஸ்ஐ சந்திரசேகரன், ஏட்டு சந்திரசேகரன், ஆனந்த் பாபு ஆகியோர் கொண்ட டீம் டெல்லியில் சென்று முகாமிட்டு நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்ட கிழக்கு டெல்லியைச் சேர்ந்த அபினேஷ்குமார் (எ) அமன் (26) என்பவரை கைதுசெய்து, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.