Skip to main content

நடுக்கடலில் படகு கவிழ்ந்த சம்பவம் - 2 மீனவர்கள் மீட்பு;8 மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த செப்.2 ஆம் தேதி திங்கள்கிழமை புதிய படகு வாங்குவதற்காக கடலூருக்கு சென்றனர்.

அங்கிருந்து போட்டியா எனப்படும் புதிய ரக நாட்டுப்படகை வாங்கிக்கொண்டு, மறுநாள் (செப்.3) செவ்வாய்கிழமை ராமேஸ்வரம் திரும்பி கொண்டிருந்தனர். படகில் நாகசாமி மகன் முனியாண்டி (47), ஆண்டி மகன் ரஞ்சித்குமார் (23), காந்தி மகன் மதன், ஆறுமுகம் மகன் இலங்கேஸ்வரன் (20), காந்தி மகன் தரைக்குடியான், ராமகிருஷ்ணன் மகன் காந்தி குமார் (23), முனியாண்டி மகன் செந்தில்குமார் (31), சண்முகம் மகன் முனீஸ்வரன் (24), ராஜ் மகன் உமாகாந்த் (19), ராஜா மகன் காளிதாஸ் (29) ஆகியோர் இருந்தனர்.

 

 2 fishermen rescued - 8 fishermen in searched

 

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கடந்து உச்சிப்புளி அருகே நடுக்கடலில் சென்ற போது  திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர்.

அதில் செந்தில்குமார், காளிதாஸ் என்ற இரண்டு மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது படகில் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்தில்குமார், காளிதாஸ் ஆகிய இரண்டு மீனவர்களையும் உயிரோடு மீட்டுக் கொண்டு வந்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட மீனவர்கள் தந்த தகவலின் பேரில்,  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திற்கு கிழக்கே உச்சிப்புளி அருகே படகு, கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

 2 fishermen rescued - 8 fishermen in searched


இதையடுத்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை ஆய்வாளர் சுபா, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல்படை அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் மாவட்ட கடலோர காவல் படையினர், தொடர்ந்து 8 மீனவர்களையும் தேடி வருகின்றனர். மேலும் மத்திய மீம்புக்குழுவினரும் ஹெலிக்காப்டர் மூலம் தேடி வருகின்றனர். மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களிடமும் தேடும் பணிக்காக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 

இந்த நிலையில் மீட்கப்பட்ட 2 மீனவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' - ராமதாஸ் கண்டனம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
'A prison sentence for Tamil fishermen?'- Ramadoss condemned

அண்மையாகவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. மீனவர் ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, விடுதலை செய்யப்பட்ட 18 மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 6 மாதங்களும், ஜான்சன் விடுதலையான பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டால் ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இது சட்டத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசு செய்யும் அத்துமீறலாகும்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிப்பது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும்.  கடந்த 4-ஆம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், கடந்த 16-ஆம் நாள் தீர்ப்பளித்த இலங்கை நீதிமன்றம், 20 மீனவர்களை விடுதலை செய்ததுடன், இரு மீனவர்களுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனையும், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து தான் நேற்று மீனவர் ஜான்சனுக்கு இலங்கை நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது.

'A prison sentence for Tamil fishermen?'- Ramadoss condemned

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் சிங்கள அரசு மற்றும் நீதிமன்றங்களின் புதிய அத்துமீறல், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் அடுத்தகட்ட அணுகுமுறையாகவே தோன்றுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே தமிழக மீனவர்களைக் கைது செய்வது, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வந்தது. ஆனால்,  அவற்றின் மூலம் தமிழக மீனவர்களை நிலைகுலையச் செய்ய முடியாததால் மீனவர்களை மாதக்கணக்கிலும், ஆண்டுக் கணக்கிலும் சிறையிலடைக்கும் அணுகுமுறையை  இலங்கை அரசு கையில் எடுத்திருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக கடந்த காலங்களிலும் இத்தகைய உத்திகளை இலங்கை  பயன்படுத்தியிருக்கிறது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பவர்களுக்கு ரூ.25 கோடி  தண்டம் விதிக்கும் சட்டத்திற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அப்போது தமிழ்நாட்டில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. இப்போது அதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது.

வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும்,  சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

மிகக்குறுகிய பரப்பளவைக் கொண்ட தமிழக இலங்கை கடல் எல்லையை இரு தரப்பு மீனவர்களும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு மீன் பிடிப்பது தான் இந்த சிக்கலுக்கு தீர்வாகும். கடந்த காலங்களில் பலமுறை இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து கொண்டு தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது. மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப் படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா புறக்கணிப்பு  என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.