Skip to main content

ஒரே நாளில் 1200 வாகனங்கள் பறிமுதல், விதிமுறைகளை மீறியதாக 1000 வழக்குகள் பதிவு!!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
1200 vehicles confiscated in one day, 1000 cases registered for violating the rules

 

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தொடர்ந்து பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, வரும் 31ம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியதோடு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையும் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

 

அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட 42  சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம், அரசு மருத்துவமனை ரவுண்டானா, காளைமாடு சிலை சந்திப்பு, சோலார், ரிங் ரோடு போன்ற பகுதிகளிலும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பதிவு பெற்றிருந்தாலும் கடும் சோதனைக்கு பிறகே தொடர்ந்து செல்ல வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

 

எவ்வளவு கண்டிப்புடன் போலீஸ் இருந்தாலும் முழு ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றித் திரிகின்றனர். அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்துகிறார்கள். அந்த நபர்கள் ஏதோவொரு சாக்குப் போக்கு சொல்கிறார்கள். வேண்டுமென்றே வெளியே சுற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் போலீஸார், அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர். மேலும், முக கவசம் அணியாமல் வந்தவர்கள், கரோனா தடுப்பு முறைகளை மீறியவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 24 -ம் தேதி  ஒரே நாளில் முழு ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறியதாக ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

 

ரூபாய்  5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தேவையில்லாமல் வெளியே சுற்றியதாக  மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதில் 1050 இருசக்கர வாகனங்கள் 150 நான்கு சக்கர வாகனங்களாகும். இதைப்போல் முக கவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதித்து 60,000 வசூல் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதைபோல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 15 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று 25 ந் தேதி இரண்டாவது நாளாக போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இன்றும் ஏராளமானோர் ஊரடங்கை மீறிச் சுற்றிக் கொண்டு இருந்தனர். அவர்களைப் பிடித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்