தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்திருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ''அன்று துப்பாக்கிச் சூடே நடந்தது. அந்த துப்பாக்கிச் சூட்டையே நான் டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவரெல்லாம் இன்று கவர்னரைப் பார்த்தார்கள் என்று சொன்னால் இது எல்லாம் ஒரு முக்கியமான விஷயமா. இதையெல்லாம் பார்த்துத்தான் தமிழக மக்கள் அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் திமுகவை, முதல்வர் மு.க. ஸ்டாலினை, எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். சிறப்பாகத் தமிழகத்தில் ஆட்சி நடத்த வாய்ப்பு அளித்துள்ளனர்.
அவர் அங்கு போனது இதற்கெல்லாம் இல்லை. அவங்க கட்சிக்குள்ள அடிச்சுக்கிறாங்க இல்ல அதை எப்படியாவது கவர்னரிடம் சொல்லி மேலே உள்ள உள்துறை அமைச்சரிடம் சொல்லி அதை சரி பண்ண முடியுமா என்பதற்காகத்தான் போனார்களே தவிர வேறு எதுவும் இல்லை. திமுக அரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் எல்லாத் துறையும் சட்டம் ஒழுங்காக இருந்தாலும், காவல்துறையாக இருந்தாலும் கல்வித் துறையாக இருந்தாலும் சுகாதாரத் துறையாக இருந்தாலும் விவசாய துறையாக இருந்தாலும் அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரே முதல்வர் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் தான்'' என்றார்.