கடந்த ஏப்ரல் 1ம் தேதி அன்று, வேலூரில் மக்கள் பட்டுவாடா செய்யப்படவிருந்த பணம் பிடிபட்டது. இந்தப் பணம் திமுகவிற்கு சொந்தமானது என்றும், துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 17ம் தேதி, தேர்தல் ரத்துசெய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து துரைமுருகனும், திமுகவும் அமைதியானது. இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இவர் அன்றிலிருந்து, இன்றுவரை வேலூரில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். தேர்தல் நிறுத்தப்பட்டதை முதலில் கண்டித்தார். பிறகு மே 19ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தபோது, இடைத்தேர்தல் நடக்கும்போது, வேலூரிலும் தேர்தல் நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தார். இத்தனை நாட்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தவர், இன்று குடியரசு தலைவருக்கு மனு கொடுத்தார். ஆனால் அவர் இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் கூட்டணி கட்சிகள் அவருக்கு உரிய ஆதரவை தரவில்லை.
இவர் இவ்வளவு முயற்சி செய்வதற்கு காரணம், வேலூரில் துரைமுருகனுக்கு கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவை இருப்பதுபோல், ஏ.சி. சண்முகத்திற்கும் கல்லூரிகள், பள்ளிகள் இருக்கின்றன. வேலூரில் இருவருமே ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு தேர்தல் நிதியும் கொடுத்துள்ளார் என்ற தகவலும் உள்ளது. இப்படியாக அவரும் தொகுதிக்காக நிறைய செலவு செய்துள்ளார். இந்த தேர்தல் ரத்தானால் ஒட்டுமொத்தமும் வீணாகிவிடுமே. மீண்டும் வேலூருக்கு தேர்தலை அறிவித்தால், மறுபடியும் முதலிலிருந்து செலவு செய்ய வேண்டுமே என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது.