தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று (26/03/2021) தமிழகத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கோவை (தெற்கு) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பா.ஜ.க.வின். தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வாக்குச் சேகரித்தார். மோட்டார் சைக்கிளில் சென்றும், தாண்டியா நடனம் ஆடியும் ஸ்மிருதி இரானி வாக்குச் சேகரித்தார்.
பிரச்சாரத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "செல்வம் தாமரையில் அமர்ந்து வருமே தவிர டார்ச் லைட்டில் அமர்ந்து வராது. புண்ணியம் செய்தால் வாழ்க்கையில் செல்வம் வரும்; அந்தச் செல்வம் தாமரையில் அமர்ந்து வரும். வளர்ச்சித் திட்டங்கள், பிரச்சனைகள், தீர்வுகள் பற்றி வானதியுடன் கமல் விவாதிக்கத் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல், கோவை செல்வபுரத்தில் விஸ்வகர்மா சங்கத்தினரைச் சந்தித்துப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், கோவை (தெற்கு) சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன், "சாதி வேண்டாம் என நினைப்பவன்; ஆனால் அனைத்துச் சமூகத்தினருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக வந்த உங்கள் தொழிலை சாதி பார்க்காமல் மற்றவர்களுக்கும் கற்றுத்தர வேண்டும். வேலை தேடுபவர்களை, பிறருக்கு வேலை தரும் வகையில் முதலாளி ஆக்குவேன்" என்றார்.
கோவை (தெற்கு) சட்டமன்றத் தொகுதியில் கமல்ஹாசன் ஒருபுறம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சரின் பிரச்சாரத்தால் அந்தச் சட்டமன்றத் தொகுதி களைகட்டியுள்ளது.