Skip to main content

காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்ய திமுக எம்.எல்.ஏ. போராட்டம்! தூத்துக்குடியில் பரபரப்பு!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 

காவல்துறையினரை கண்டித்தும் அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் திடீர் போராட்டத்தில் குதித்திருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன்.

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்ந்த இளைஞர் பென்னி, பழைய பேருந்து நிலையத்தில் மொபைல் ஃபோன் கடை வைத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு பென்னியையும் அவரது தந்தை ஜெயராஜையும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றிருக்கிறார். இது குறித்து அவர்களும், அவர்களது உறவினர்களும் எதற்காக அழைத்து வந்திருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியதற்கு இன்ஸ்பெக்டரிடமிருந்து சரியான பதில் இல்லை. கேள்வி கேட்ட உறவினர்களை மிரட்டி ஸ்டேசனில் இருந்து வெளியே போக வைத்திருக்கிறார். இந்த நிலையில், இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் இருந்த பென்னி திடீரென உயிரிழந்திருக்கிறார். காவல் துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் லாக்-அப்பில் பென்னி இறந்துள்ளதாக அவரது உறவினர்களும் நண்பர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால், தூத்துக்குடி மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தினரும் காவல் துறையினருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள். 

                     

இந்த நிலையில்தான், சாத்தான் குளம் காவல் துறையினரை கண்டித்தும், பென்னியின் மரணத்துக்கு காரணமான போலீஸ்காரர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ.அனிதா ராதாகிருஷ்ணன். பென்னியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு போராடி வருகின்றனர்.  இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ. ரகு கனேஷுஆகிய இருவரும் தான் காரணம் என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில், பென்னியின் மரணத்துக்கு நீதி கேட்டும் அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார் திமுக எம்.பி. கனிமொழி. மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடமும் புகார் தெரிவித்திருக்கிறார். 

                   

இதற்கிடையே, சாத்தான்குளம் காவல்துறையினர் சமீபகாலமாக நடத்து வரும் அராஜகங்களைச் சுட்டிக் காட்டியும், பென்னியின் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக டி.ஜி.பி. திரிபாதிக்கு புகார்க் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள் வியாபாரிகள் சங்கத்தினர். காவல் நிலையத்தில் உயிரிழந்துள்ள பென்னியின் மரணம், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரிச்சிகளை ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்