Skip to main content

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு சீமான் விடும் சவால்

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

புதிய கல்விக்கொள்கைக் குறித்த சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும் அக்கல்விக்கொள்கை குறித்துப் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விட்டுள்ளார்.
 

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தம்பி சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையைப் புதிய கல்விக் கொள்கையின் மூலம் பலிகொடுத்துவிடக் கூடாது என்ற தனது இனமான கோபத்தை அறச்சீற்றமாக வெளிப்படுத்தினார். அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சிந்திக்கத்தக்கது. நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.


 

கல்வி என்பது மக்களுக்கான மகத்தான சேவை. அதனை விற்பனைப்பண்டமாக மாற்றி, வணிகமாக்கிப் பொருளீட்ட எந்நாளும் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் பல்வேறு மேடைகளில் எப்பொழுதும் முன்வைத்துக் கொண்டிருக்கும் கருத்துகளையே தம்பி சூர்யா பிரதிபலித்திருக்கிறார். கலைஞன் என்பவன் எப்போதும் மக்களுக்கானவன்; அவன் மக்களை மகிழ்விப்பவன் மட்டும் அல்ல; ஒரு துயர் மக்களைச் சூழ்கிறபோது அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுபவனாகவும் இருக்க வேண்டும். அதனைச் செய்வதே ஒரு கலைஞனின் மகத்தான அறம் என்பதை உணர்ந்து, சமூகப் பொறுப்புணர்வோடும், எதிர்காலத் தலைமுறையினர் குறித்த பெருத்த அக்கறையோடும் நெஞ்சுரம் கொண்டு தம்பி சூர்யா பேசியிருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது.


 

Surya



கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளைக் கொண்டு ‘புதிய கல்விக்கொள்கை’ எனும் பெயரில் மும்மொழிக்கொள்கைத் திட்டத்தின் வாயிலாக இந்தியைத் திணித்திட முற்படுவதும், நாடு முழுமைக்குமுள்ள அரசின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த வழிவகைச் செய்வதும், மாநிலங்களின் கல்வி உரிமையை முழுமையாகப் பறிக்கும் கொடுஞ்செயலாகும். பல்வேறு விதமான வாழ்வியல் முறைகளையும் , வேறுபட்ட மொழி கலாச்சாரப் பின்புலங்களையும், பல்வேறு வகையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், மாறுபட்ட நிலவியல் அமைப்புகளும் இருக்கிற இந்நாட்டில் ஒரே மாதிரியான தேர்வுமுறையினைக் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பது மட்டுமல்லாது சமூக அநீதியும்கூட. ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளையும், அதற்குரிய வசதிகளையும் ஏற்படுத்த முயலாத இந்நாடு ஒரே மாதிரியான தேர்வை மட்டும் நாடு முழுமைக்கும் நடத்த முற்படுவது மிகப்பெரும் மோசடி.
 

30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையில் தலையிட்டுக் கல்வியை முழுக்க முழுக்கத் தனியார் வசமாக்குவதும், பாடத்திட்டங்களைப் படிப்படியாக இந்துத்துவமயப்படுத்தும், பாஜகவின் நீண்டகாலத் திட்டங்களான, 'ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே மதம்!' என்பது போன்ற நோக்கங்களைக் கொண்ட தொடர்ச்சியான சதிச்செயல்களின் இன்னொரு வடிவமே இது. கல்வியிலே முதன்மையாகத் திகழுகிற நாடுகள் யாவும் தாய்மொழி வழிக்கல்வியைத் தந்து, அரசே கல்விக்கூடங்களை ஏற்று நடத்தி அந்நாட்டின் அறிவுலகத்தைத் தீர்மானிக்கிறது. ஆனால், இந்நாடு கல்வியை முற்றுமுழுதாக மேட்டுக்குடி மக்களுக்கானதாக மாற்றி வணிகமாக்கிவிட்டது. இத்தகைய அநீதிகளைத்தான் தம்பி சூர்யா சுட்டிக் காட்டி அதற்கெதிராகக் கலகக்குரல் எழுப்பியிருக்கிறார்.
 

புதிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வரும் சூலை 25 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கடைக்கோடி மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வூட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அவர் இதனைப் பேசியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து இளைஞர்களிடையே மீண்டும் ஒரு விவாதம் தலையெடுக்க அவரது உணர்வும், உண்மையும் கலந்த பேச்சு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. சூர்யாவின் இக்கருத்தை கருத்தால் வெல்ல முடியாத பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர் பெருமக்களும் வழமைபோலத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்க முற்படுவதும், கருத்துரிமையையே கேள்விக்கு உள்ளாக்குவதுமானச் செயல்களில் ஈடுபடுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது.


 

தம்பி சூர்யாவின் கருத்தைக் கொச்சைப்படுத்தி மடைமாற்ற முயன்று, புதிய கல்விக் கொள்கையைப் புனிதமான கல்விக் கொள்கை போலச் சித்தரித்துத் தம்பி சூர்யாவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் பாஜக தலைவர்கள், அதிமுக அமைச்சர்கள் அக்கல்வி கொள்கை குறித்துப் பொத மேடையில் மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா என்பதுதான் நாங்கள் எழுப்புகிற கேள்வி. அவ்வாறு பொதுமக்கள் முன்னால் புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதத்தை மேற்கொள்ள வக்கற்ற இவர்கள், இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கி இருக்கிற அடிப்படை உரிமையான கருத்துரிமையையே நசுக்கும் வகையில் சூர்யாவின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவரைத் தனிப்பட்ட முறையில் வசைபாடுவதும் ஏற்புடையது அன்று! அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
 

புதிய கல்விக் கொள்கை குறித்தானத் தம்பி சூர்யாவின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி துணையாக நின்று புதிய கல்விக் கொள்கை குறித்துக் கருத்தியல் பரப்புரையும், மிகப்பெரும் களப்பணியும் செய்து அதற்கெதிரான தொடர் முன்னெடுப்புகளைக் கையிலெடுத்து மக்களின் துணையோடு போராடி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இப்புதிய கல்விக் கொள்கையை நாம் தமிழர் கட்சி முறியடிக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.