Skip to main content

“சவுக்கு சங்கர் என்னையும் தப்பா பேசுனவருதான், ஆனா அதுக்காக...” - ஹெச்.ராஜா

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
H.Raja speech about Shavukku Shankar

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக திருச்சி முசிறி டிஎஸ்பி யாஸ்மின்  அளித்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவதூறாக பேசியது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து வரப்பட்டு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் அளித்தார். ஆனால் அந்தப் புகாரை பெண் காவலர்கள் மறுத்தனர். இதன் பின்னர் திருச்சி சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். ஆனால் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி நேற்று (16-05-24) மதியம் சவுக்கு சங்கரை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் நேற்று மதியம் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதற்கு சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீஸ் காவலில் கொடுத்தால் அவர் தாக்கப்படுவார். எனவே கஸ்டடி தரக்கூடாது என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது, சவுக்கு சங்கருக்கு மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், பா.ஜ.க நிர்வாகி ஹெச்.ராஜா இன்று (17-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஒரு யூடியூபரை கைது செய்திருக்கிறார்கள். அவர் என்னை பற்றியும் தப்பா பேசுனவருதான். சவுக்கு சங்கருக்கு யாருமே நேர்மையான ஆள் கிடையாது. அது தான் அவருடைய கொள்கை. அதனால், அவரை கைது செய்ததில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதுக்காக கையை உடைக்கணுமா?. இது காவல்துறையினருடைய மோசமான நடவடிக்கை.” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு பரிந்துரை; பா.ஜ.க. கடும் எதிர்ப்பு!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 BJP Strong opposition on Retired Justice Chanduru Committee Recommendation

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒய்வுபெற்ற கே.சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்று (18-06-24) சமர்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. 

இந்த நிலையில், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பா.ஜ.க நிர்வாகி ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.கவினர் இன்று (19-06-24) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஹெச்.ராஜா, “மாணவர்களின் கையில் கயிறு கட்டக்கூடாது என எப்படி சொல்லலாம்?. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஹிந்து மக்களை குறிவைத்து இது போன்று பரிந்துரை செய்துள்ளார். இதை ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு அவர் கொடுத்திருக்கிறார். இந்தப் பரிந்துரைகள் கண்டிப்பாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மேலும், இந்தப் பரிந்துரைகளை மாநில அரசு கண்டிப்பாக ஏற்கக் கூடாது” என்று பேசினார். 

Next Story

'அழுத்தம் யாரால்?; சிபிஐ விசாரணை வேண்டும்'-பதிவாளருக்கு சென்ற புகார் !

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
 'Pressure by whom?; CBI should investigate'-

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 24 ஆம் தேதி விசாரணை நடத்தியது. நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர்.  இதில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதேநேரம் சவுக்கு சங்கருடைய தாயார் கொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் நீதிபதி பாலாஜி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார். கோவை சிறையில் இருக்கக்கூடிய சவுக்கு சங்கரைப் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரண்டு நீதிபதிகளும் ஒரே கருத்தில் உத்தரவு பிறப்பித்தனர். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அடுத்த கட்டமாக விசாரணை செய்வதற்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளார்கள். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்வதற்குச் சென்னை நீதிமன்றத்தினுடைய பொறுப்பு தலைமை நீதிபதி முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது..

மேலும் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'இந்த வழக்கை பொறுத்தவரை அதிகாரமிக்க நபர்கள் சிலர் அவர்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரணைக்கு எடுக்க நேரிட்டேன்' என குறிப்பிட்டிருந்தார். அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதால் சவுக்கு சங்கர் வழக்கில் இறுதி விசாரணை அவசரமாக நடத்தப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டு இருப்பது நீதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.

இந்நிலையில் நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு 2 நபர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என  உயர்நீதிமன்ற பதிவாளரிடம்  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு கொடுத்துள்ளார்.

இதேபோல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.