Skip to main content

நாங்க சின்ன கட்சிங்க... மெகா கூட்டணியெல்லாம் எங்களால் அமைக்க முடியாது... டிடிவி தினகரன்

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

 

சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். ஆர்.கே.நகரில் எப்படி உற்சாகமாக வேலை பார்த்தோமோ அதைப்போலவே 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளிலும் வேலை பார்க்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 

 

ammk


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 
 

நாடாளுமன்றத் தேர்தல், மினி சட்டமன்றத் தேர்தல் வருவதால் அதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும்டதான் கூட்டணி வைத்துள்ளோம். 
 

வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
 

கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம். வெளியிடும்போது சொல்லுவோம். நாங்க சின்ன கட்சிங்க. மெகா கூட்டணி, பயில்வான் கூட்டணி, பெரிய பெரிய கூட்டணியெல்லாம் இருக்கு. அதைவிட்டுவிட்டு இங்க வந்து கேட்கிறீர்கள். 
 

18 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளதா?
 

வேட்பாளர் பட்டியல் வரும்போது பாருங்கள். நீங்க என்ன எங்களை பெருசா எடுத்துக்குறீங்க. தொலைக்காட்சிகளையெல்லாம் பார்க்கிறேன். எங்களை ஒரு பொருட்டாக நினைக்கலை. இன்னைக்கு வந்து அதிசயமாக கேட்கிறீங்க. தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிய வரும். 
 

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறதே?
 

தேர்தல் ஆணையமே நினைத்தாலும் முடியாத அளவுக்கு தேர்தல் வந்துவிட்டது. இடைத்தேர்தலை தள்ளிப்போடலாம் என்று பகிரங்க முயற்சியெல்லாம் செய்தார்கள். மத்தியில் இருக்கும் ஆட்சியும், மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் கூட்டணி வைத்திருக்கிறது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றார்.‘
 

மேலும் பேசிய அவர், இன்று அவர்கள் எப்படி கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அதுபோன்ற மெகா கூட்டணியெல்லாம் எங்களால் அமைக்க முடியாது. நாங்கள் மக்களை சந்திக்கணும், தொண்டர்களுக்கு பதில் சொல்லணும், பக்கத்து வீட்டுக்காரருக்கு, எழுத்த வீட்டுக்காரருக்கு பதில் சொல்லணும். இந்த மாதிரி நாங்க கூட்டணி அமைத்தால் விட்ருவீங்களா?  தேர்தலுக்கு தேர்தல் மக்கள் புதுக்கணக்கு எழுதுவார்கள். இவ்வாறு கூறினார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'விட்டால் திருப்பூரையும் மணிப்பூர் ஆகிவிடுவார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'If BJP enterTirupur will also become Manipur' - Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய முதல்வர் ,''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அரசமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள்.  மோடியின் பாஜக அரசு வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பாஜகவின் டிஎன்ஏவில் ஊறிப்போய் உள்ளது. பாஜகவை உள்ளே நுழையவிட்டால் சமூக அமைதியைக் கெடுத்து விடுவார்கள். அதிகாரத்தில் உள்ள பாஜக வென்றால், திருப்பூரை மணிப்பூர் ஆக்கி விடுவார்கள். பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவை பிரதமர் மோடி சிதைக்க பார்க்கிறார். சமூகநீதி என்ற வார்த்தையே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இட ஒதுக்கீட்டைத்தான் காலி செய்வார். வருகின்ற மக்களவைத் தேர்தல் இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கின்ற போர். வீழ்ச்சிதான் மோடியின் சாதனை. மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் நிம்மதியாக நடமாட முடிகின்றதா? ஊடக நிறுவனங்களால் நிம்மதியாக செயல்பட முடிகிறதா? தங்களுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த நிறுவனங்களை விலைக்கு வாங்கி  பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுவார்கள். உண்மையை எழுதும் பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பது, அவர்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பது எனப் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவு தான் இன்று ஊடகச் சுதந்திரத்தில் 180 நாடுகளில் 161 வது இடத்தில் இந்தியா இருக்கிறது. நம்முடைய பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி எவ்வளவு பெரிய அவமானம் ஏற்படுத்தி இருக்கிறார். மோடி சொன்ன புதிய இந்தியா அவருடைய ஆட்சியில் எப்படி இருக்கிறது? 32 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைவோடு இருக்கிறார்கள். 44 விழுக்காடு மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தவில்லை. 30 விழுக்காடு மக்கள் அடிப்படை சுகாதார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள். 41 விழுக்காடு மக்களுக்கு வீடுகள் இல்லை. இப்படித்தான் உள்ளது மோடி சொன்ன புதிய இந்தியா.

மோடி ஆட்சியில் தானியங்களின் விலை 54 விழுக்காடு அதிகமாகிவிட்டது. பால் பொருட்களின் விலை 53 விழுக்காடு அதிகம், எண்ணெய் விலை 48 விழுக்காடு அதிகம், காய்கறி விலை 48 விழுக்காடு அதிகம், மருத்துவ செலவுகள் 71 விழுக்காடு அதிகம். கல்விச் செலவுகள் 60 விழுக்காடு அதிகம். இதெல்லாம் மோடி சொன்ன வளர்ச்சியா? 10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தோம் எனச் சொல்லிக் கொள்ளும் பாஜக, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் எந்த மேடையிலும் திட்டங்களையும், சாதனைகளையும் சொல்ல முடியவில்லை. ஆனால் திராவிட மாடலாட்சியைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டில் கஜானாவை தூர்வாரிய அதிமுகவினால் ஏற்பட்ட நிதிச் சுமை; ஒன்றிய பாஜக அரசு தரும் நிதி நெருக்கடி ஆகியவற்றை மீறி ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறோம்'' என்றார்.