Skip to main content

அமைச்சராயிடுவோமோ? ஜாதகம் பார்க்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...

Published on 18/05/2019 | Edited on 19/05/2019

 

தமிழகத்தில் மே 23ஆம் தேதி வரும் இடைத்தேர்தல் முடிவுகள்தான் அதிமுக ஆட்சி நீடிக்குமா? ஆட்சி மாற்றம் ஏற்படுமா? கலையுமா? என்பதையெல்லாம் தீர்மானிக்கும். திமுக மற்றும் அமமுக வெற்றி வாய்ப்புகளை பறித்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக அரசுக்கு சிக்கல் ஏற்படும். அதிமுக ஆட்சியை கலைக்க திமுகவும், அமமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதால், எடப்பாடி பழனிசாமி தனது நம்பிக்கைக்குரிய அமைச்சர்களோடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

 

Congress MLA



அமைச்சர்களின் ஆலோசனைப்படி எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சியை தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை பெற வேண்டிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாராம். மேலும் தனது கோரிக்கையை அவர்கள் மறுக்கக்கூடாது என்பதற்காக கூட்டணி ஆட்சி என்ற ஒரு தூண்டிலை போட்டுள்ளாராம்.
 

 

திமுக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளோடு இணைந்துதான் ஆட்சியை அமைக்க முடியும். கூட்டணி ஆட்சிக்கு திமுக ஒப்புக்கொள்ளாது. அதிமுகவுக்கு ஆதரவு அளித்தால் ஆட்சி அதிகாரத்தில் நீங்கள் பங்கேற்கலாம் என பேசப்பட்டு வருகிறதாம். 


 

 

மேலும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதே நாளான மே 23ஆம் தேதி வெளியாகிறது. இதில் மத்தியிலும் காங்கிரஸ் தலைமையிலான அணியா? 3வது அணியா என்ற குழப்ப நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. 3வது அணி வந்தாலும் பரவாயில்லை, பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதுதான் தங்களது நோக்கம் என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.
 

இந்த நிலையில் திமுகவோடு நெருக்கம் காட்டாத சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எப்படி நிலைமை ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பிரதமர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வர வாய்ப்பு இருந்தால் பரவாயில்லை. பிரதமர் பதவி நழுவிபோனால் திமுக நம்மை மதிக்காது. ஆகையால் திமுக ஆட்சி அமைக்க கூட்டணி ஆட்சி என்பதை வலியுறுத்தலாம். இது ஒரு நல்ல வாய்ப்பு. அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கலாம் அல்லது திமுகவை கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ள வைக்கலாம் என்று பேசி வருகிறார்களாம். கூட்டணி ஆட்சி வருமோ, அமைச்சராயிடுவோமோ? என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் இப்போதே ஜாதகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்...
 

 


 

சார்ந்த செய்திகள்