Skip to main content

அதிமுக குறித்த கேள்வியும்; ஈவிகேஎஸ். இளங்கோவன் நகைச்சுவை பதிலும்

 

evks elangovan talk about admk for erode east byelection

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ஆம் தேதி இறுதி நாளாகும். திமுக கூட்டணி சார்பில் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 3 ஆம் தேதி(இன்று) வேட்பு மனு தாக்கல் செய்தார். 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “என்னைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில், அதாவது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன். எனது மகன் இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து செய்த பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நமது முதலமைச்சர் ஈரோட்டுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் முத்துசாமி, முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன். இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிகப் பெரும் வெற்றியை பெறுவோம். 

 

ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன். இதைப்போல் சாயக் கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன். திமுகவினர் இந்த இடைத்தேர்தலில் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியை பெறுவோம். அதிமுக எடப்பாடி அணி வேட்புமனு ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு நகைச்சுவையாக, “ஏழாம் தேதியோடு வேட்பு மனு முடிகிறது. அப்படி என்றால் அவர்கள் அடுத்த நாள் எட்டாம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம்” என்றார்.

 

பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக இரு அணிகளையும் இணைக்க முயற்சி செய்து வருகிறாரே என்ற கேள்விக்கு, “அண்ணாமலையை பொறுத்தவரை அவர் என்னைவிட பெரிய மனிதர். நான் அவரை விட சின்ன மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. மேலும் எதைப் பற்றியும் நான் கவலைப்படமாட்டேன்” என்றார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடைத்தேர்தலில் 30 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துள்ளார்கள் என்று புகார் அளித்துள்ளார். அது குறித்து கேட்டதற்கு, “அவர் மீதே பல்வேறு புகார்கள் உள்ளன. சிறைக்கெல்லாம் போயிட்டு வந்தவர்தானே” எனப் பதிலளித்திருக்கிறார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !