Skip to main content

“சத்தியமூர்த்திபவன் மோதல் எதார்த்தமாக நடந்தது” - ரூபி மனோகரன் விளக்கம்

Published on 11/12/2022 | Edited on 11/12/2022

 

“Sathyamurthibhavan's clash happened realistically” explained by Ruby Manokaran

 

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை மாற்றிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று சத்தியமூர்த்திபவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்சிக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி அடிதடி ஏற்பட்டு 3 பேருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூபி மனோகரனை இடைநீக்கம் செய்ய 62 மாவட்டத் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.என்.ராமசாமி ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நேற்று காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்திருந்தது. ரூபி மனோகரன் முறையாகப் பதிலளிக்கும் வரை அவரைத் தற்காலிகமாக நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை நிறுத்தி வைப்பதாக கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்தார்.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இது போன்ற பிரச்சனைகள் அனைத்து கட்சிகளிலும் இருக்கும். இது திட்டமிட்டோ வேண்டுமென்றோ செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அல்ல. அது எதார்த்தமாக நடந்த நிகழ்ச்சி. அது முடிந்து விட்டது. எங்கள் கட்சிக்குள் எவ்விதமான சலசலப்பும் கிடையாது. நாங்கள் அனைத்தையும் பேசி தீர்த்துவிட்டோம். யாருக்காவது எதாவது மனவருத்தம் இருந்தால் அவர்களுக்கு என் வருத்தத்தையும் தெரிவித்துவிட்டேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்