திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் தாராசந்து. இவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் இடம் மைலாப்பூரில் இருந்துள்ளது. அந்த இடத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு 2024 பிப்ரவரியில் சென்று பார்த்தபோது, அந்த இடத்தில் எச்.டி.எப்.சி. வங்கி சார்பில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸை பார்த்து அதிர்ந்துவிட்டார். அதில், தன்னுடைய இடத்திற்கு ஜெயராமன், கலைச்செல்வி என்பவர்கள் பெயரில் 3 கோடியே 3 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வங்கிக்கடன் வாங்கியிருப்பது தெரியவந்தது.
சந்தேகமடைந்த தாராசந்து, உடனடியாக வில்லங்கச் சான்று போட்டு பார்த்துள்ளார். அதில் 27.09.2019ஆம் தேதியில் சென்னை சென்ட்ரல் இணைப்பு சார்பதிவாளர் 1-ல் ருக்குமணிதேவி, ராஜசேகருக்கு ஜெனரல் பவர் கொடுத்ததாக பதிவாகியிருந்தது. மேலும் அந்த ஜெனரல்பவரை வைத்து ராஜசேகர் 31.01.2020அன்று, ஜெயராமன் மனைவி கலைச்செல்வி பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதன் மூலமாகவே இவர்கள் 3 கோடி கடனை பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை சி.சி.பி.யில் தாராசந்து புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் சி.சி.பி. விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையில், தாராசந்துவின் இடத்தை போலி ஆவணம் மூலமாக ருக்குமணி தேவி சொந்தமானதாக மாற்றியதையும், இதனை மாற்றிக்கொடுத்தது புரோக் கர் ராஜசேகர் மற்றும் போலி ஆவணம் தயாரிக்கும் குமார் என்பதும் தெரியவந்தது. இவர்களோடு சேர்த்து, சாட்சி கையெழுத்து போட்ட இருவர் என மொத்தம் 8 பேர் போலி ஆவணத்தால் மோசடி செய்ததை உறுதிசெய்து கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதுமுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்களை ஒழிக்கத்தான் ஆன்லைன் பத்திரப்பதிவு கொண்டுவந்தார்கள். அதையும்தாண்டி, புரோக் கர் மூலமாக மோசடி செய்வதற்கெனவே ஒரு டீம் இருக்கத்தான் செய்கிறது. இந்த விவகா ரத்தின்போது, சென்னை சென்ட்ரல் இணைப்பு சார்பதிவு அலுவலகத்தில் வின்சென்ட் என்பவர் உதவியாளராக பணிபுரிந்தார். அவருடைய அண்ணன் வேதநாயகம் ஆவண எழுத்தாளராக உள்ளார். வேதநாயகத்திடம் அடிக்கடி ஆவணம் எழுத வருபவரான புரோக்கர் ராஜசேகர், நாளடைவில் அனைவரோடும் நண்பராக, இவர்கள் ஒரு டீமாக இணைந்தனர். இந்த சூழ்நிலையில் வேதநாயகத்திடம் ராஜசேகர், "ஒரு இடம் இருக்கிறது. இந்த இடத்துக்கு ஆளே இல்லாததால் அந்த இடத்தை எளிதாக மாற்றிவிடலாம்' என யோசனை சொல்ல, அத்தகவலை வேதநாயகம், அவரது தம்பி வின்சென்டிடம் கூறியுள்ளார். வின்சென்டோ, இதெல்லாம் குமாரால்தான் முடியும், குமார் நினைத்தால் சாதித்துவிடலாம் எனத் தனது நண்பரைக் கைகாட்டியுள்ளார். அதையடுத்து குமாரையும் அழைத்துப்பேசி, அனைவரும் ஒரு டீமாக இந்த மோசடியில் ஈடுபடத் திட்டமிட்டனர்.
இந்த குமார் மீது ஏற்கெனவே போலி ஆவண விவகாரத்தில் 7 வழக்குகள்வரை உள்ளதாம். சார்பதிவாளர்களை தன் கைக்குள் போட்டுக்கொள்வதில் இவர் கில்லாடியாம். அப்படி உதவக்கூடிய சார்பதிவாளர்கள் ஏதேனும் விவகாரத்தில் மாட்டும் சூழலில், அக்குற்றத்தை தானே ஏற்றுக்கொள்வாராம். இதனால் சார்பதிவாளர்கள் இவருக்கு தைரியமாக ஒத்துழைப்பு தந்து வருமானமீட்டி வருகிறார் களாம். அதேபோல், தங்களுக்காக குமார் சிறைக்கு சென்றால், அவரை ஜாமீனில் வெளியிலெடுப்பதை பலனடைந்த சார்பதிவாளர்கள் பார்த்துக் கொள்வார்களாம். இந்த குமார்தான் அப்போதைய சார்பதிவாளரான பிரபாவதிக்கு ஆல்இன்ஆலாக இருந்துவந்துள்ளார்.
இவர்கள் திட்டமிட்ட மோசடி விவகாரம் குறித்து அப்போதைய சார்பதிவாளர் பிரபாவதியிடம் பேசியிருக் கிறார் குமார். அவர் "50' கேட்கிறார் எனச் சொல்லி, அதற்கும் ஓகே வாங்கியபின்னர் திட்டத்தை செயல்படுத்தியுள்ள னர். அதற்காக ருக்குமணிதேவி எனும் வயதான பெண் மணியை தயார் செய்து, அவர்மூலம் ஆள்மாறாட்டம் செய்து, பத்திரப்பதிவு செய்துள்ளனர். பேசியபடியே சார்பதிவாளர் பிரபாவதிக்கு "50' கொடுத்து காரியத்தை முடித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியே சார்பதிவாளர் பிரபவதி தான். இந்த இடம் குறித்து வில்லங்கம் போட்டுப் பார்த் திருந்தாலே யார் உரிமையாளர் என்பது தெரிய வந்திருக்கும். அதேபோல் ஆன்லைனில் ஆதாரை இணைத்திருந்தாலும் உண்மை தெரியவந்திருக்கும். யாருடையது என்று தெரியக்கூடாதென்பதற் காகவே வோட்டர் ஐடியை வைத்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதெல்லாம் பிரபாவதி செய்த குற்றமே என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆனால் சார்பதிவாளர் பிரபாவதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதபடி, ஏற்கெனவே குறிப்பிட்டபடி, குமார் தான் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார். மீண்டும் குமாரை சார்பதிவாளர் பிரபாவதியே ஜாமீனில் வெளியே எடுத்து, தற்போதும் பிரபாவதியுட னேயே இருந்துவருகிறார். இப்படிப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக இருக்கும் சுதாமல்யா துணையோடு தற்போது ஏ.ஐ.ஜி.யாக பிரபாவதிக்கு பதவி உயர்வு தருவதற்கான வேலை நடக்கிறதாம். பிரபாவதி யிடம் இதுகுறித்து விபரம் அறிய செல்போனில் தொடர்புகொண்டால் அட்டெண்ட் செய்ய வில்லை. மெசேஜுக்கும் பதில் இல்லை.
இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு இவ்விஷயம் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்களாம். அதையும் மீறி இவர்களின் மீது அரசு நடவடிக்கை எடுக் கிறார்களா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.