சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, தனது ஆதரவாளர்களைச் சந்திப்பது, ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொள்வது, அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கை விடுவது என தொடர்ந்து ஆக்டிவ் அரசியலில் இருக்க முயற்சித்து வருகிறார். அதிமுகவில் மீண்டும் அவரைச் சேர்க்க ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருவதால், சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வந்துள்ளது.
இந்த நிலையில், திருச்சியில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சசிகலாவிடம் எப்போது அரசியல் பயணத்தை தொடங்குவீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சசிகலா ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு விரைவில் அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ளதாகவும், உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.