Skip to main content

“முதலமைச்சரின் பேட்டியைப் பார்த்தால் ஞாபகத்திற்கு வரும் பழமொழி” - இ.பி.எஸ் சாடல்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

"A saying that comes to mind when you watch the interview of the Prime Minister" EPS opined

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றி வெளியிட்டுள்ளார். 

 

அதில், “கள்ளச் சாராயம் மற்றும் விஷச் சாராய மரணங்கள், கனிம வளக் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகள் கொல்லப்படுதல் போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது அமைச்சர்களின் விதண்டாவாத பேச்சுக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் அடாத செயல்பாடுகளால் தூக்கம் கெட்டுவிடுவதாகக் கூறிய திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், இதிலிருந்து தப்பிக்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்த நிலையில், இந்தச் சுற்றுலாவின் மூலம் 3,233 கோடி முதலீட்டினை ஈர்த்ததாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்து புளகாங்கிதம் அடைந்துள்ளார். 

 

பத்திரிகைகளில் 9 நாள் சிங்கப்பூர்-ஜப்பான் பயணத்தில், முதலில் 1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வந்தது; பின்னர் 3,233 கோடி என்று வந்தது. மேலும் இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் 1,891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறியுள்ளார். அப்போது, உண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று திரட்டிய முதலீடு 1,342 கோடிதான். இதில் எது உண்மை? எதை நம்புவது ? திமுக அரசின் முதலமைச்சருடைய பேட்டியைப் பார்க்கும்போது, 'கேப்பையில் நெய் வடிகிறதென்றால், கேட்பாருக்கு புத்தி எங்கே போயிற்று' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

 

முதலமைச்சர் ஒப்பந்தம் மேற்கொண்ட கொமாட்சு நிறுவனம் 2005 லேயே ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர்களது CEOக்களை அழைத்து அவர்களிடமே முதலீடுகளை பெற்றிருக்கலாம். அதை விடுத்து சிங்கப்பூர் ஜப்பான் வரை சென்றதை தோல்வி என்கிறோம். 2019-ஆம் ஆண்டு நானும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள் மட்டும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்றோம். 

 

எனது வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களின் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசு பேரிடர் காலத்திலேயே சுமார் 60 ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடுகளை ஈர்த்து வந்து சாதனை புரிந்தது. அதிலும் குறிப்பாக, 2020-ல் ஒரே நேரத்தில் டாடா, ஒலா போன்ற நிறுவனங்களிடமிருந்து மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.  குறிப்பாக, கார் தயாரிப்பிற்கு தேவைப்படும் முக்கிய மூலப் பொருளான செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை இந்திய வெளிநாட்டு - (ஃபாக்ஸ்கான்) கூட்டு நிறுவனம் சுமார் 1.54 லட்சம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் துவக்க இருந்த நிலையில், அந்நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியம் வழங்க, இந்த திமுக அரசு மறுத்ததன் காரணமாக, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய இத்தொழிற்சாலை தற்போது குஜராத்திற்கு சென்றுவிட்டது. இவ்வாறு தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை இழந்தால், 2030-ல் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியள் அளவுக்கு உயர்த்துவோம் என்று கூறியது வெறும் வாய்ச்சவடால் தானே.

 

அதேபோல் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 4 ஆயிரம் கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்க இருந்த ஆப்பிள் தொழிற்சாலை திமுக அரசின் பாராமுகத்தால் கர்நாடகத்திற்கு சென்றுவிட்டது. தமிழகத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிறுவனங்களை, வேறு மாநிலங்களுக்கு அனுப்பி தாரை வார்த்துவிட்டு, துபாய் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று 6 ஆயிரம் கோடி மற்றும் 3 ஆயிரம் கோடி என்று சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்ததற்கு, தன் முதுகை தானே தட்டிக்கொள்ளும் திராவிட மாடல் முதலமைச்சரின் வாய்ச் சவடால் திறமையை தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளனர்” என கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.