Skip to main content

“ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?” - இ.பி.எஸ்.க்கு ஆர்.எஸ். பாரதி கேள்வி

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

RS Bharathi raised question to eps

 

“துணிவிருந்தால் - நேர்மையிருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி” என்று திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய ‘தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்’ எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார். “பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா... நடக்காது ஸ்டாலின் அவர்களே” என்று பேசியிருக்கிறார்.

 

அவர்களின் கட்சியில் வானகரக் கூட்டம், ராயப்பேட்டை ரவுடிகள் கலவரம் என எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு, தி.மு.க. மீது பாய்வது என்பது, திசைத் திருப்புகிற வேலையன்றி, வேறு எதுவுமல்ல. அந்தக் கட்சித் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தி.மு.க.வை எதிர்த்துத்தான் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.

 

அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?


இதோ அண்மையில்கூட கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சோதனைக்குள்ளான இந்த இருவரும் யார்? ஒன்றுக்குள் ஒன்றான குடும்ப உறவுகள் மூலம் அரசாங்கத்தின் கஜானாவை சுரண்டிக் கொழுப்பதற்காக பழனிசாமி ஆட்சியில் ஒப்பந்தங்களைப் பெற்றவர்கள்தானே?


அவர்கள் மூலமாக உங்கள் ஆட்சியில் எப்படி அரசுப் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறீர்கள் என்று உங்கள் டெல்லி எஜமானர்களின் நிர்வாகத்தில் உள்ள வருமான வரித்துறை சோதனை நடத்தி வெளிப்படுத்தியிருக்கிறது. எங்கே ஒரே ஒரு வார்த்தை, ‘பழைய பழனிசாமினு நினைச்சிக்கிட்டீங்களா, மோடி அவர்களே’ என்று பேசிப் பாருங்களேன். உங்களின் பழைய கதை, புதிய கதை என எல்லாக் கிளறப்படும். அதனை உங்கள் கட்சியினராலேயே தாங்க முடியாது.


நடவடிக்கை எடுத்தவர்களிடம் மோதுவதற்குத் திராணியில்லாத - முதுகெலும்பில்லாத அரசியல்வாதியான பழனிசாமிக்கு தி.மு.க.வையும், அதன் தலைவரும் எந்நாளும் மக்கள் நலன் காத்திட உழைத்திடும் முதலமைச்சருமான, இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்ப எந்த அருகதையும் இல்லை.


துணிவிருந்தால் - நேர்மையிருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்றும் பதில் சொல்லுங்கள் பழனிசாமி” என்று தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்