Skip to main content

ரவுடி வசூர் ராஜா கைதுக்கு பின்னால் அரசியல்வாதிகளா?

Published on 05/08/2018 | Edited on 05/08/2018
vz

 

வேலூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி வசூர் ராஜா. நான் திருந்தி வாழப்போகிறேன் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் மனு தந்துவிட்டு வசூரில்  தனது வீட்டில் இருந்தவனை ஆகஸ்ட் 3ந்தேதி காலை கைது செய்தனர் சத்துவாச்சாரி போலிஸார். அன்று இரவு நீதிமன்றத்தில் நிறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

 

இதுதொடர்பாக போலிஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, திருந்தி வாழப்போகிறேன் என மனு தந்துவிட்டு வந்தவன், வேலூர் பாலாற்றில் திருட்டு தனமாக மணல் அள்ளி விற்பனை செய்ய தொடங்கினான். மணலில் நல்ல வருமானம் என அவனது ஆலோசகர்கள் கூறியதை தொடர்ந்தே அந்த தொழிலில் இறங்கியுள்ளான். இதற்காக 15 லாரிகளை வாங்கி விட்டுள்ளான்.

சத்துவாச்சாரியை அடுத்த அலுமேலுமங்காபுரம் உட்பட பாலாற்றின் சில பகுதிகளில் தன்னை தவிர வேறு யாரும் மணல் அள்ளக்கூடாது என ஏற்கனவே அங்கு திருட்டு மணல் அள்ளிக்கொண்டு இருந்தவர்களை மிரட்டியுள்ளான். இதுப்பற்றிய தகவல் எங்களுக்கு வந்தது. ஆனால் யாரும் புகார் தரவில்லை.

 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ந்தேதி எங்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டு ஒருவர் வாகன சோதனையில் இருந்தபோது, மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்தியபோது, ராஜா அண்ணன் லாரி என எகத்தாளமா பேசியிருக்கான். யாராக இருந்தாலும் விடமுடியாதுன்னு சொன்னதும், அவன் செல்போனில் தகவல் சொல்ல கொஞ்ச நேரத்தில் ராஜா அங்கு வந்து, என் வண்டிகளை பிடிச்சேன்னா அவ்ளோ தான்னு மிரட்டியிருக்கான். இந்த தகவல் வந்தபிறகு அதிகாரிகள் சென்று உதவி ஆய்வாளரை மீட்டு வந்து அவரிடமிருந்து புகாரை வாங்கி ராஜாவை கைது செய்துள்ளோம் என்றார்கள்.

 

பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் தொழிலில் ஆளும்கட்சியில் பெரும் புள்ளிகளாக உள்ள அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், தொழிலதிபர்களும் ஈடுப்பட்டுள்ளனர். அதோடு, கட்சி வேறுபாடுயில்லாமல் பல கட்சியினரும் கூட்டு சேர்ந்தே பாலாற்றை சுரண்டுகிறார்கள். 

 

இதற்கிடையே இதுவரை கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், பணம் கேட்டு மிரட்டல், கொலை செய்தல், கூலிப்படை தலைவனாக இருந்த வசூர் ராஜா, 15 லாரிகளை வாங்கிவிட்டு மணல் அள்ளி விற்க களத்தில் குதித்ததோடு, ஏற்கனவே அந்த தொழிலில் உள்ளவர்களை மிரட்டியதால் ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் கூட்டு சேர்ந்து ராஜாவை கைது செய்ய வைத்துள்ளார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 

சார்ந்த செய்திகள்