Skip to main content

இந்த ஆட்சியதிகாரம் யாருக்கானது? யார் பதில் சொல்வது? பாஜகவை கடுமையாக விமர்சித்த சீமான்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020


 

ntk


தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே அண்மையில் தாக்கல் செய்த மனு ஒன்றில், பிப்ரவரி 16- ஆம் தேதி வரை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்களின் பெயர் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். ரிசர்வ் வாங்கி இதற்கு அளித்த பதிலில் ரூ.68 ஆயிரம் கோடி கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இதனைக் கடுமையாக விமர்சித்தனர். 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருக்கையிலும் தனிப்பெரு முதலாளிகளின் நலனையே முதன்மைப்படுத்துகிறார்களென்றால் இந்த ஆட்சியதிகாரம் யாருக்கானது? வாக்குச்செலுத்திய மக்களுக்கானதா? தேர்தல் நிதியளித்த தனிப்பெரு முதலாளிகளுக்கானதா? யார் பதில் சொல்வது? பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி குறித்துக் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியபோது எவ்விதப் பதிலுமளிக்காமல் நழுவிய மத்திய அரசின் நயவஞ்சகம் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. 

மேலும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இயலாது மத்திய ரிசர்வ் வங்கியிலுள்ள ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியிருப்பைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் பொருளாதார நிலையிலுள்ள மத்திய அரசு, தனிப்பெரு முதலாளிகளின் வாராக்கடனை வசூலிக்க முன்வராது அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டிய தேவையென்ன? வங்கிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து திவாலாகிக் கொண்டிருக்கும் சூழலில் இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடனைச் சத்தமின்றித் தள்ளுபடி செய்ய வேண்டிய நிர்பந்தமென்ன வந்தது? கரோனோ நோய்த்தொற்று மீட்புப்பணிகளுக்காக நாட்டு மக்களிடம் நிதியுதவி கோரும் பிரதமர் மோடி, 68 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலிக்காது விடுவிக்க வேண்டிய மர்மமென்ன? சாதாரண ஏழை, எளிய மக்களின் சேமிப்பு மற்றும் கடன் தொகையில் கறாராக நடந்து கொள்ளும் அரச நிர்வாகம், பெருமுதலாளிகள் விவகாரத்தில் மட்டும் பெட்டிப் பாம்பாய் பதுங்குவதும், சாமரம் வீசி சேவகம் புரிவதும் ஏன்? எதற்காக? அவர்களின் வாராக்கடனை வசூலிக்க மட்டும் மென்முறையைக் கையாள முனையும் மத்திய அரசின் போக்கு யாருக்காக நிகழ்கிறது" என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்