சென்னை பெரம்பூரில் உள்ள தொன் போஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக இன்று (23.12.2024) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அரசாக இருக்கிறது. சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எல்லாம் நான் விரிவாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கொடுமைகளை எதிர்க்கும், தடுக்கும் காவல் அரணாக தி.மு.க. தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் வழங்குகிறேன்.
சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வலிமையான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது தி.மு.க. ஆனால், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த கட்சி அ.தி.மு.க. இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, அதற்கு ஆதரவாக எப்படியெல்லாம் பேசினார் என்று உங்களுக்கு நினைவிருக்கும். மத்திய பா.ஜ.க. அரசைப் பொருத்தவரைக்கும், மதச்சார்பின்மை என்ற சொல்லையே அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கத் துடிக்கிறார்கள். அந்தச் சொல்லை நீக்க முடியவில்லை என்றால், அரசியலமைப்புச் சட்டத்தையே நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் அண்ணல் காந்தியடிகளின் படத்தை, சம உரிமைத் தத்துவத்தின் அடையாளமாக இருக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை - நாடாளுமன்ற அமைச்சகமே புறக்கணிக்கும் அளவிற்கு மதவாதம் மத்தியில் ஆட்சி செலுத்துகிறது. நல்லிணக்க இந்தியாவில் இப்படிப்பட்ட பிளவுவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமில்லை. அதனால்தான், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை பலத்தை அளிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது. ஆனால், மக்களின் ஒற்றுமை ஜனநாயகச் சக்திகளின் அணித் திரட்சி அவர்களுக்குக் கடிவாளம் போட்டிருக்கிறது. அதனால், ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ என்று சொல்லி, ஒற்றுமை இந்தியாவை சிதைத்து, ஒற்றை இந்தியாவை உருவாக்கப் பார்க்கிறார்கள்.
ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற ஒற்றை எதேச்சாதிகார முடிவை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் பற்றும், நாட்டுப் பற்றும் உள்ள ஒவ்வொரு இந்தியரும் இதற்கு எதிராக இருப்பார்கள். நாடு நல்லவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்கும். அனைத்து மக்களும் ஒற்றுமையாக சமத்துவமாக வாழும் நாள் நிச்சயம் விடியும். சிறுபான்மையினர் உரிமைக்காக திமுக எந்தவித சமரசமும் இல்லாமல் போராடும் என்ற உறுதியை நான் மீண்டும் அளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.