Skip to main content

“மூப்பனாரின் ஆத்மா ஜி.கே. வாசனை மன்னிக்காது” - செல்வப்பெருந்தகை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 Muppanar does not forgive gk vasan says Selvaperundagai

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இல்லத்தி்ல் பா.ஜ.க. - த.மா.க. இடையே கூட்டணி குறித்துப் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து பா.ஜக.வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இணைவதாக கட்சியின் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க. கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டு சேர்ந்திருக்கிறது. மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் காங்கிரசை விட்டு வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி முதல் தேர்தலில் 1996 இல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றவுடன் தலைநகர் தில்லிக்கு த.மா.கா.வில் வெற்றி பெற்ற 20 மக்களவை உறுப்பினர்களை தம்முடன் அழைத்துச் சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றார்.

ஏப்ரல் 1999 இல் அன்று பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அன்று தமிழ் மாநில காங்கிரசில் ப. சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேர் மக்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனாரை அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்றுத் தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று மக்களவை உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

 Muppanar does not forgive gk vasan says Selvaperundagai

அன்று வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் ஜி.கே. வாசன் வகுப்புவாத பா.ஜ.க.வில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் இயக்கத்தில் மக்கள் தலைவர் மூப்பனார் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 11 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கேபினட் அந்தஸ்துள்ள கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பதவிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வழங்கியிருக்கிறார். இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்