Skip to main content

“முப்போகம் விளைகின்ற பூமியில் சுரங்கம்; கேட்டால் தெரியவில்லை என்கிறார்கள் அமைச்சர்கள்” - பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

"Mining in the land where the growth is growing; the Minister of Agriculture does not know anything" - Interview with Pmk Anbumani Ramadoss

 

இனி நாங்கள் புதிய சுரங்கங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 
செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “என்எல்சி பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். தமிழக அரசை பலமுறை எச்சரித்திருக்கின்றேன். சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர், நான் சொன்னதெல்லாம் ஏதோ பொய்யான தகவல் போன்று தொடக்கத்திலே பேசினார். பின்னர் ஆதாரங்களுடன் நான் சொன்னேன். கடந்த ஆண்டு மத்திய அரசு நிலக்கரித்துறையை சார்ந்து ஒரு ஏலத்தை அறிவித்தார்கள். அந்த ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பகுதிகளில் அறிவித்தார்கள். அதில் ஒன்று சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம், இரண்டாவது மைத்திரிபட்டி நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் நிலக்கரி எடுக்கின்ற திட்டம். மூன்றாவது தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் வடசேரி நிலக்கரி திட்டம்.  டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கின்ற மூன்று திட்டங்களுக்கு ஏலம் விட்டார்கள்.

 

ஒரு மாநில அரசை கேட்காமல், மாநில அரசு அனுமதி கொடுக்காமல் இந்த மூன்று பகுதிகள் அதுவும் மூன்றுமே விவசாயப் பகுதிகள். முப்போகம் விளைகின்ற விவசாய பூமியில் மாநில அரசின் அனுமதி கேட்காமல் மத்திய அரசு ஏலத்தை விடுகிறார்கள். அது மட்டுமல்ல மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு கடந்த ஆண்டு என்எல்சி 3755 கோடி ரூபாய் அறிவித்து கிட்டத்தட்ட 14,000 கோடி ரூபாய்க்கு மூன்றாவது சுரங்கத்தைச் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் தொழில்துறை அமைச்சருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்று சொல்கிறார். விவசாயத் துறை அமைச்சருக்கு சுத்தமாக ஒன்றும் தெரியவில்லை என்று சொல்கிறார். விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த நிலங்களை காப்பாற்ற வேண்டும்.

 

91 ஆயிரம் ஏக்கர் கடலூர் மாவட்டத்தில் மட்டும். அரியலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 25,000 ஏக்கர், தஞ்சாவூரில் முப்பதாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் தமிழக முதல்வர் நடக்கின்ற சட்டமன்றத் தொடரில் ஒரு அறிவிப்பு வெளியிட வேண்டும். இனி நாங்கள் புதிய சுரங்கங்களுக்கு அனுமதி கொடுக்கமாட்டோம் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். நேற்று முன்தினம் விவசாயிகளுக்கும் மாவட்ட கலெக்டருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. அந்த நாளில் என்எல்சி சம்பந்தமாக எதுவும் பேசக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை பார்த்து கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். இந்த மாவட்ட ஆட்சியர் ஆட்சியராக இருப்பதற்கு லாயக்கு கிடையாது. அவருக்கு தகுதி கிடையாது. மாவட்ட ஆட்சியர் என்றால் மக்களை சார்ந்து இருக்க வேண்டும். விவசாயிகளை சார்ந்து இருக்க வேண்டும். ஆனால் இவர் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சார்ந்து செயல்படுகிறார்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்