சென்னை நந்தம்பாக்கத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நேற்று (06-12-24) நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி இருந்தார்.
அப்போது பேசிய அவர், “மணிப்பூரில் என்ன நடந்துட்டு இருக்குன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் ஒரு அரசு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. சரி அங்க தான் அந்த அரசு அப்படி இருக்கிறது என்றால் இங்கு இருக்கின்ற அரசு எப்படி இருக்கிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் என்ற ஊருல என்ன நடந்தது என எல்லாருக்குமே தெரியும். சமூகநீதிப் பேசுகின்ற அரசு அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியலையே. இவ்வளவு காலங்கள் தாண்டி, இத்தனை வருடங்கள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லையே அது தான். இதையெல்லாம் அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலை குனிந்து போவார். நடக்கிற பிரச்சனைகளுக்கெல்லாம் நாம் குரல் கொடுக்க வேண்டும்.
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களை மைனஸ் ஆக்கி விடுவார்கள். தொல்.திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்பொழுது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்” என்று பேசினார். விஜய்யின் இந்த பேச்சு, தமிழக அரசியலில் தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில், திருமாவுக்கு அழுத்தம் இருப்பதை உணர்வதாக அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “விஜய் கூறியதுபோல கூட்டணியில் திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதை உணருகிறோம். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும். வாரிசு அடிப்படையில் தான் ஸ்டாலின் முதல்வரானார். தனிப்பட்ட உழைப்பில் அந்த இடத்துக்கு அவர் வரவில்லை” என்று கூறினார்.