Skip to main content

கிடைச்ச பதவிக்கு நீங்களே வேட்டு வச்சிடாதீங்க... கே.என்.நேருவின் அதிரடி அரசியல்... அப்செட்டில் டி.ஆர்.பாலு!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

தலைமைச் செயற்குழு கூட்டத்துக்கு முன்பாகவே தி.மு.க. முதன்மைச் செயலாளர் மாற்றத்திற்கான ஆலோசனை நடைபெற்றதை நக்கீரன் முன்கூட்டியே வெளியிட்டிருந்தது. அந்தப் பொறுப்பில் இருந்த டி.ஆர்.பாலுவுடன் கூடுதலாக, புதிதாக நியமிக்கப் பட்டுள்ள கே.என்.நேருவையும் சேர்ந்து பணியாற்றச் செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்றன. முதன்மைச் செயலாளர் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டாராம் பாலு. அவர் நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருப்பதால் முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, கே.என். நேரு நியமிக்கப்படுவதாக, முரசொலியில் முதல் பக்கத்தில் தலைமைக்கழக அறிக்கை வெளியாகியிருந்தது. தி.மு.க.வினரைப் பொறுத்தவரை பொதுப்பதவி எத்தனை இருந்தாலும் கட்சியில் என்ன பதவி என்பதுதான் முக்கியமானது. தற்போது கட்சிப் பதவி இல்லாததால் அப்செட்டாகியிருக்கும் டி.ஆர். பாலுவுக்கு வேறு என்ன பதவி தரலாம் என்ற ஆலோசனை நடக்கிறதாம்.

 

dmk



முன்னாள் அமைச்சர் நேரு தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், 30 ஆண்டுகாலம் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து கட்சித் தலைமையின் மதிப்பைப் பெற்றவர். அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் ஒட்டுமொத்தமாக தி.மு.க. வெற்றி பெற்றது. அதற்கானப் பரிசுதான் மாநிலப் பொறுப்பு. அதனால் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவிக்கு போட்டி அதிகமாகியுள்ளது.

முதன்மைச் செயலாளரான நேரு, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற போது, "தற்போது போலவே திருச்சி மாவட்டம் இரண்டு அமைப்புகளாக இருக்கட்டும்' என்று கூறியிருக்கிறார். தன்னுடைய இடத்தில் முன்னாள் துணைமேயர் அன்பழகன் என்பதுதான் நேருவின் கணக்கு. அதே நேரத்தில், அன்பில்மகேஷும் மாவட்ட அரசியலில் கவனம் செலுத்த நினைப்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த அன்பழகனை நியமிப்பது குறித்து தயக்கம் ஏற்படவே, முன்னாள் அரசு வழக்கறிஞரான பாஸ்கரன், வைரமணி பெயர்களை நேரு சிபாரிசு செய்தார். பாஸ்கரன் கட்சிக் காரரில்லை என்று அன்பழகன் தரப்பு அறிவாலயத்திற்கு புகார் அனுப்பியுள்ளது.


இதனிடையே, சென்னையிலிருந்து திருச்சி திரும்பிய நேருவுக்கு மாவட்ட எல்லையிலிருந்து பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சமயபுரம் அருகே அமர்க்களமான வரவேற்புடன் காத்திருந்தவர்களிடம், “கிடைச்ச பதவிக்கு நீங்களே வேட்டு வச்சிடாதீங்க' என தனக்கேயுரிய ஸ்டைலில் சொன்னார். அவர் அப்படிச் சொன்ன நிலையிலும், திருச்சி மாநகர தி.மு.க. இணையதள டீம் நேருவின் மகன் அருண், ராமஜெயம் மகன் வினித், உறவினர் வினோத் ஆகியோர் படங்களை பதிவு செய்து "நேருவின் அரசியல் வாரிசே வருக!' என புது வாரிசுகளை அறிமுகப்படுத்தியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

-தாவீதுராஜ்
 

சார்ந்த செய்திகள்