Skip to main content

“15 நாட்களில் 5 பேர் பலி; ஆளுநரின் அலட்சியத்தை இனியும் பொறுக்கக்கூடாது” - அன்புமணி ராமதாஸ்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

“Governor's indifference should not be tolerated anymore" Anbumani Ramadoss

 

“15 நாட்களில் 5 பேர் பலியாகியுள்ளனர். ஆளுநரின் அலட்சியத்தை அரசு இனியும் பொறுக்கக்கூடாது” என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

 

கோவை உப்பிலிப்பாளையம் ஆர்.வி.எல். நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர். 29 வயதான இவர் சென்னையில் என்ஜினியராக வேலை செய்து வருகிறார். தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு கோவை திரும்பிய சங்கர் அங்குள்ள தனியார் ஓட்டலில் மீட்டிங் நடத்த அறை வேண்டும் எனக் கூறி சாவியைப் பெற்றுக்கொண்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து ,வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சங்கர் எழுதிய கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், சங்கர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பல லட்சங்களில் பணத்தை இழந்ததும், அதிக அளவு கடன் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

 

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய ஆட்கொல்லியாக மாறி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 5 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்குப் பலியாகியுள்ளனர்.

 

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்துகிறது. இதுகுறித்து அமைச்சரே நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஆளுநர் அசைந்து கொடுக்காமல் இருப்பது சரியல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது.

 

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 59 நாட்களாகின்றன. ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்ட பிறகு தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பல்வேறு ஐயங்களையும் யூகங்களையும் ஏற்படுத்துகிறது.

 

ஆளுநரின் அலட்சியத்தையும் காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்