Skip to main content

“விவசாயிகளிடம் கரும்பு கொள்முதலில் முறைகேடு” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

Edappadi Palanisamy has alleged that there malpractice procurement sugarcane

 

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு கொள்முதலுக்கு விவசாயிகளுக்கு வழங்க அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விடக் குறைவாக அதிகாரிகளும், இடைத்தரகர்களும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்காக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிக அளவில் செங்கரும்பை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பொங்கலுக்கு செங்கரும்பு வழங்கப்படமாட்டாது என்று இந்த திமுக அரசு அறிவித்ததையொட்டி, வருகின்ற தைப்பொங்கலுக்கு, அம்மாவின் ஆட்சிக்காலத்தில் வழங்கியதைப் போல், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முழு செங்கரும்பு வழங்க வேண்டும் என்றும், செங்கரும்பை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதேபோல், செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தினர். 

 

இந்த அரசு எங்களது தொடர் கோரிக்கையை அடுத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு கரும்புக்கு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33 ரூபாய். ஆனால், இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன. 

 

செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை இந்த விடியா அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அரசு அறிவித்த கரும்புக்கான முழுத்தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், பொறுப்புள்ள எதிர்க்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்த திமுக அரசை எச்சரிக்கை செய்கிறேன்.

 

கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களைப் பயன்படுத்துவது போன்ற திமுக அரசின் விவசாய விரோதச் செயல்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.