Skip to main content

"திட்டங்களை நிறைவேற்றுவதில் எஸ்.பி.வேலுமணி கில்லாடி"  -எடப்பாடி பழனிசாமி சர்டிஃபிகேட்! 

Published on 24/01/2021 | Edited on 24/01/2021
ttttt

 

வெற்றி நடை போடும் தமிழகம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது பிரச்சாரத்தில், திமுகவையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சிப்பதுடன், தமிழக அரசு செய்துள்ள சாதனை திட்டங்களை பட்டியலிட்டு வருகிறார்.

 

'கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலில் வழிபட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கிய  எடப்பாடி பழனிசாமிக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையின் முக்கிய வீதிகள் அனைத்தும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. முதல் நாளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வெள்ளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். 

 

முன்னதாக கோவை தொழிலதிபர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி பற்றி குறிப்பிட்டபோது, "கோவை மாவட்டத்துக்காக பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி மக்களின் அன்பைப் பெறுவதில் எஸ்.பி.வேலுமணி முதன்மையாக திகழ்கிறார். என்னை பார்க்கும் போதெல்லாம் மக்கள் நல திட்டங்களுக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்பார். அவர் கோரிக்கை வைக்காத நாட்களே இல்லை. நிதி இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றி எல்லாமல் கவலைப்படாமல் அதை செய்யுங்க, இதை செய்யுங்க என்று கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்பார் வேலுமணி. மக்களுக்கான திட்டங்களை அடிக்கடி கேட்டு கேட்டு, அதனை பெறுவதில் மற்ற அமைச்சர்களுக் கெல்லாம், வேலுமணி முன்மாதியாக திகழ்கிறார்" என்று பாராட்டினார். 


 

கோவைக்காக அதிமுக அரசின்  சாதனைகளை பட்டியலிட்ட அவர், "ரூ. 1625 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டம்,ரூ. 172 கோடி மதிப்பில் வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். ரூ 39.17 கோடியில் உக்கடம் பெரியகுளம் குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகுபடுத்தப்படுகிறது. 624 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள். ரூ. 230 கோடி மதிப்பில் நொய்யல் நதி படுகையில் 18 அணைகள், 22 குளங்கள் புனரமைப்பு. ரூ. 1,620 கோடி மதிப்பில் 10.1 கி.மீ நீளம், 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழித்தடங்களுடன் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம். ரூ. 381 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் புதிய கட்டிடங்கள். தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம் மற்றும் புளியகுளம் ஆகிய 5 பகுதிகளில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ரூ.500.25 கோடி மதிப்பில் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை. ரூ. 194 கோடி மதிப்பில் காந்திபுரத்தில் 2 அடுக்கு மேம்பாலம் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என சுட்டிக்காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.