தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கட்சிகள் பிரச்சாரக் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை, கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு போன்றவை இன்னும் முழுமை அடையவில்லை. சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளின் சார்பிலும் விருப்ப மனு விநியோக தேதியை அறிவித்துவிட்டன.
அதிமுக வருகிற 24ஆம் தேதி விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் நேற்று (17.02.2021) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. முதல் நாளிலே 1,450 பேர் விண்ணப்பங்களை வாங்கினர். மேலும் வருகிற 24 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கலாம் என திமுக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.