Skip to main content

“நாங்கள் என்ன ஸ்கூல் பிள்ளையா?” - தி.மு.க கவுன்சிலரால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு!

Published on 27/07/2024 | Edited on 27/07/2024
DMK councilor stirs up excitement in the corporation meeting in vellore
                                                        கோப்பு படம்

வேலூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ஆகியோர் பங்கேற்றனர். 

மாநகராட்சி கூட்டத்தில், பா.ஜ.கவைச் சேர்ந்த 18 வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் சுமதி பேசும்போது, ‘எனது வார்டு பகுதியில் உள்ள பாலாற்றில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை எடுத்து வந்து பாலாற்றில் மலை போல் கொட்டி நீர் நிலைகளை பாழ்படுத்தி வருகின்றனர். இதை முறையான இடத்தில் தேர்வு செய்து அந்த இடத்தில் கொட்டி பாலாற்றைக் காப்பாற்ற வேண்டும் என பலமுறை கூறியும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தொலைபேசியில் அழைப்பு விடுத்தால் தொலைபேசியை எடுப்பது இல்லை’ என குற்றம் சாட்சி பேசினார்.

அதனை தொடர்ந்து, 45 வது வார்டு தி.மு.க மாநகராட்சி உறுப்பினர் அஸ்மிதா பேசுவதற்கு நீண்ட நேரம் காத்திருந்து மைக் கொடுக்காததால் திடீரென எழுந்து, ‘நாங்கள் எல்லோரும் மாநகராட்சி மக்கள் நிறை குறைகள் குறித்து பேசுவதற்காக தான் வந்திருக்கிறோம். எங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மைக் கொடுப்பதில்லை இந்த மைக்கை வாங்குவதற்குள் போதும் போதும்னு ஆகிவிடுகிறது. ஸ்கூல் பசங்க போல மைக் கொடுங்க, மைக் கொடுங்க என்ன கை உயர்த்தி கேட்கிறோம். நாங்கள் பிரச்சனைகளை சொல்வதற்காக தான் வந்திருக்கிறோம், மைக்கை கொடுப்பதற்கு ஏன் யோசிக்கிறீர்கள்’ என தி.மு.க மேயரிடம், தி.மு.க மாநகராட்சி உறுப்பினர் அஸ்மிதா பேசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பேசிய அதிமுகவைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர் எழில், ‘மாநகராட்சி கவுன்சிலர் உட்பட எந்த பொறுப்பிலும் இல்லாத முன்னாள் எம்.பியும், தி.மு.க கட்சியை சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, மாநகராட்சி கூட்டம் நடைபெறும் போதெல்லாம் மேடையில் அமர்ந்து கொள்கிறார். மாநகராட்சி மன்றத்தில் எந்தவிதமான பதவிலும் இல்லாதவர் எல்லா கூட்டத்திலும் மேடையில் அமர்ந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. இது மாநகராட்சி மன்ற கூட்டமா? கட்சிக் கூட்டமா’ என மாநகராட்சி மேயரிடமும் ஆணையரிடமும் கேள்வியை எழுப்பினார். இதனால் மாநகராட்சி மன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

சார்ந்த செய்திகள்