Skip to main content

அவர்களுக்கு வேண்டியது பணம், பணம், பணம்... அவர்களுக்கு சீட்டு முக்கியமில்லை, நோட்டுதான் முக்கியம்: சந்திரகுமார்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர், 2011ல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால் விஜயகாந்த் கட்சிக்கு சரிவு ஏற்பட்டது. அதற்கு காரணம் அவருடைய குடும்பத்தினரின் தவறான வழிகாட்டுதல்தான். 2009ல் சுதீஷ், பிரேமலதா இருவரும் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட ஆரம்பித்துவிட்டனர். அதற்கு முன் தலையீடு வீட்டிற்குள் இருந்திருக்கலாம். அது வெளியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
 

2006லேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்று பிரேமலதா முயற்சித்திருக்கிறார். இது எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் வருங்கால முதல் அமைச்சர் விஜயகாந்த், தேமுதிக 234 தொகுதியிலும் தனித்து நிற்கிறது என்று கோஷம் போட்டுக்கொண்டிருந்தோம். 2014ல் எங்களை அழைத்துக்கொண்டு மன்மோகனை சந்திக்க சென்றார். பின்னர் 15 நாளில் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறார். அந்த நேரத்தில் 22 நிர்வாகிகள் சேர்ந்து திமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்றோம். இரண்டு பேர்தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றனர்.

 

chandrakumar


கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு என்று எங்களை போடுவார்கள். ஆனால் சுதீஷ், பிரேமலதா ஆகியோர் வீட்டில் முடிவு செய்துவிட்டு எங்களிடம் இதுதான் என்ற சொல்லுவார்கள். கட்சியில் இருந்தபோது எங்களைப்போன்ற நிர்வாகிகளிடம் எதுவும் கேட்டு முடிவு செய்ய மாட்டார்கள். நாங்களே வலிய சென்று கேப்டனிடம் பேசுவோம். நாங்கள் பேசும்போது எங்களிடம் அனைத்தையும் கேட்டுக்கொள்வார். வீட்டுக்கு போனவுடன் டோட்டலாக மாறிவிடுவார். அவர் குடும்பத்தின் மீது மிகந்த பாசம் வைத்துள்ளார். குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் கேட்பார். இது எல்லோருக்கும் தெரியும்.
 

என்னைவிடுங்கள், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 9 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு சென்றனர். அவர்கள் கேப்டனை குறை சொன்னார்களா? சுதீஷ், பிரேமலதாவைத்தான் கை நீட்டினார்கள். தேமுதிகவில் ஜனநாயகம் கிடையாது. தேமுதிக கட்சி என்று சொல்லுகிறார்கள். அது கட்சி கிடையாது. கம்பெனியாக நடந்து வருகிறது. எனக்கு தெரிந்து அவர்கள் முழுக்க முழுக்க சுயநலவாதிகள். அவர்களுடைய சுயநலத்திற்காக, ஆதாயத்திற்கு எதுவும் செய்வார்கள். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் பணம், பணம், பணம். மணி மைன்ட். 
 

இதனை நான் உணர்ந்தது 2011ல். 2011ல், 2014ல், 2016ல் என்ன பேசினார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது. 2019ல் தேர்தல் கூட்டணிக்காக இருபக்கம் பேசி ஆதாரத்தை உண்டாக்கினார்கள். இந்த தேர்தலிலேயே இப்படி செய்தவர்கள், கடந்த தேர்தலில் ஏன் செய்திருக்க மாட்டார்கள் என்று எண்ணிப்பார்க்கவும். 
 

கேள்வி : முன்னதாகவே வாங்கிட்டார்கள் என்கிறீர்களா?
 

பதில் : ஒவ்வொரு தேர்தல்களிலும் அதைத்தான் வேலையாக பார்க்கிறார்கள். 
 

கேள்வி : அவர்களுக்கு சீட்டு முக்கியமில்லையா?
 

பதில் : அவர்களுக்கு சீட்டு முக்கியமில்லை, நோட்டுத்தான் முக்கியம். தொகுதியை பேசிக்கொண்டிருப்பதாக சொல்லுவார்கள். அவர்கள் தொகையைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். எங்களுக்கு உள்ள வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது என்று பேசுவார்கள். முன்பு இருந்த வாக்கு வங்கி தற்போதும் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்