Skip to main content

ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் அதிமுக - திமுக இடையே வாக்குவாதம்! நாற்காலியை எடுத்து வீசியதால் பரபரப்பு!!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

Debate between AIADMK and DMK at the Panchayat Union Council meeting

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அவசரக் கூட்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையிலும், குழு துணைத்தலைவர் யாகப்பன் முன்னிலையிலும் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான 15வது நிதிக்குழு ரூபாய் ஒரு கோடியே 26 லட்சம் மத்திய அரசு நிதி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதற்கான ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றிய வார்டுகளுக்கும் பணிகள் தேர்வு செய்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் முறையாக விவாதம் நடத்தப்பட்டு ஒவ்வொரு கவுன்சிலர்களிடமும் விளக்கம் கேட்டு அதற்குரிய விளக்கமும் அளிக்கப்பட்டு கூட்டம் முடிவு பெற்றது. அப்போது ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் யாகப்பன் கூட்டம் முடிவடைந்துவிட்டதன் வாயிலாக இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மாற்று அணிக்கு மாற இருப்பது பற்றிய சந்தேகத்தைக் கேள்வியாக எழுப்பினார். அவ்வாறு இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மாற்றுக் கட்சிக்குச் செல்லவிருப்பதாக இருந்தால் இரட்டை இலையில் வெற்றி பெற்றதை ராஜினமா செய்துவிட்டு மாற்றுக் கட்சிக்குச் செல்லலாம் என ஒரு ஆதங்கத்தில் கூறினார்.

 

இதை அறிந்த பிள்ளையார் நத்தம் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் அதிவேகமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு நாற்காலியைத் தூக்கி வீசினார். இதற்கு ஆதரவு தெரிவித்து சிலுக்குவார்பட்டி ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் (பாமக) நாற்காலியைக் கூட்டத்தில் வீசினார். இதையறிந்த மற்ற அதிமுகவினர், இவ்வாறு செய்வது முறையற்றது என ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து கூட்டத்தைவிட்டு வெளியே வந்த திமுக கவுன்சிலர்கள் சிலர், “ஒன்றரை ஆண்டுகாலம் நடந்த திட்டப்பணிகளை அவ்வப்போது  நடந்த கூட்டங்களின் தீர்மானத்தில் வைக்காமல் அவசரக் கூட்டம் நடத்தி அனைத்தையும் ஒரே தீர்மானத்தில் கொண்டுவந்தது முறைகேடுகள் நடப்பதற்கு வழிவகை செய்யும். அதனால் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவரின் எதேச்சைய போக்கைக் கண்டிக்கிறோம். கூட்ட அரங்கில் வாக்குவாதத்தின்போது அதிமுக நிர்வாகிகள் சிலர் கூட்ட அரங்கின் உள்ளே புகுந்து தகராறில் ஈடுபட்டனர். அதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்’ என கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்