Skip to main content

அரசியல் விளையாட்டுக்குத் தலித் மக்களைப் பகடைக் காயாக்குவதா? திருமாவளவன் கண்டனம்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

 thirumavalavan


அரசியல் விளையாட்டுக்குத் தலித் மக்களைப் பகடைக் காயாக்குவதா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதியைத் திடுமென தமிழகஅரசு கைது செய்திருக்கிறது.
 


தலித்மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப்போலவும், தலித்மக்களை யார் சீண்டினாலும் இழிவுபடுத்தினாலும் வேடிக்கை பார்க்கமாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போமென சாதி- மதவெறியர்களையெல்லாம் எச்சரிப்பதைப் போலவும், இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் நடக்காத ஒரே மாநிலமாகத் தமிழகத்தைப் பாதுகாத்து வருவதைப்போலவும், அதீத பொறுப்புணர்வுடன் ஆர்.எஸ்.பாரதி அவர்களைக் கைதுசெய்து தனது சட்டபூர்வமான கடமையை ஆற்றியிருக்கிறது அ.தி.மு.க. அரசு. எனவே, தலித்மக்களின் மீதான தமிழக அரசின் அக்கறையைப் பாராட்டாமலிருக்க இயலுமா?
 

கரோனா காலத்திலும் தலித் மக்களுக்கெதிராக சாதிக்கொடுமைகள் நடந்துவிடக்கூடாதென கண்ணும்கருத்துமாய் செயல் படுவதால்தான், ஆர்.எஸ். பாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தலித்மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழக அரசின் கடமையுணர்வை நினைவுகூர்வது நம் கடமையல்லவா? 
 

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாகப் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தேசியகுற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.  
 


கரோனா மற்றும் முழுஅடைப்பு நெருக்கடி உள்ள இந்தச் சூழலிலும் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சாதியவன்கொடுமைகள் நடந்துள்ளன. ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறி இருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய சீராய்வு கூட்டம் கூட கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இவையெல்லாம் இந்த அரசு எந்த அளவுக்குத் தலித்மக்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் அக்கறையோடு இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும்.

இந்நிலையில், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல்பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தலித் மக்களின் மீதான அக்கறையா? அல்லது அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
 

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்குத் தலித்மக்களுக்கான 'தேசிய ஆணையம்' ஏதேனும் முனைப்பு காட்டியதுண்டா? குறிப்பாக, ஆணவக்கொலைகளைத் தடுக்க அந்த ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அதற்கென ஒரு சட்டம் வேண்டுமென கோருகிறோமே, அதனை பா.ஜ.க. அரசு என்றைக்காவது பொருட்படுத்தியதுண்டா? 
 

ஆனால், தி.மு.க. கூட்டணியைச் சிதறடிக்கும் அரசியல் விளையாட்டில் தலித்மக்களை பகடைக் காயாகப் பயன்படுத்துவதா?  தேசிய ஆணையத்தையும் இதற்காக பா.ஜ.க. அரசு  பயன்படுத்துவது நியாயமா?
 
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் பலவீனப்படுத்தாமல் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பது பா.ஜ.க.வுக்குத் தெரியும். இந்நிலையில், அ.தி.மு.க.வை முழுமையாகத் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கும் பாஜக, தி.மு.க.வைப் பலவீனப் படுத்துவதையே முதன்மையான செயல்திட்டமாக வரையறுத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்தோடுதான் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 

http://onelink.to/nknapp

 

பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி அவர்கள் தமது அரசியல் விளையாட்டுகளை நேரடியாக நடத்துவதே முறையாக இருக்கும். அதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கருவியாக்குவதும், தலித்மக்களைப் பலிகடா ஆக்குவதும் ஏற்புடையதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 

 

ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை நடத்திவருவதால் அவரைப் பழிவாங்க வேண்டுமென்கிற உணர்வு மேலோங்கியிருப்பதாலும், தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.க.வின் சாதி அரசியல் விளையாட்டுக்கு இணங்கிப்போக வேண்டிய இயலாமைக்கு ஆளாகியிருப்பதாலும் தமிழகஅரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. தமிழக அரசின் இப்போக்கு மிகவும் கண்டனத்துக்குரியதாகும். 
 

பா.ஜ.க.-அ.தி.மு.க. நடத்தும் சாதி அரசியலையும், சாதி- மதவெறி சக்திகளின் கூட்டுச்சதியையும் சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து முறியடிப்போம் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.