கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 71.81 கோடி மதிப்பிலான பன்னோக்கு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
71 கோடியே 81 லட்சத்தில் கட்டப்படும் இந்த மருத்துவமனை 3 அடுக்குகளாகக் கட்டப்பட உள்ளது. 1 லட்சத்து 11 ஆயிரத்து 278 சதுர அடியில் 300 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனையாக உருவாக உள்ள இந்த மருத்துவமனை கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். முன்னதாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் இரயில்வே சந்திக்கடவில் 61.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும் தெற்கில் ஐ.சி.எப். சாலையையும் இணைக்கும் வண்ணம் புதியதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து வில்லிவாக்கம் மேம்பாலத்தின் கீழ் 1.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இஸ்திரி பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், காது கேட்கும் கருவி என 119 நபர்களுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “அடுத்தடுத்து மண்டல அளவிலான கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்துக்குச் சென்ற நிலையில், இன்று கொளத்தூருக்குச் சென்றேன். என் கொளத்தூர் மக்கள் அளித்த வாஞ்சையான வரவேற்பில் அகம் மகிழ்ந்தேன்! அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் விதமாக, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் ரூ.71.81 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினேன். அடுத்து ரூ.3.49 கோடியில் நிறைவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும் ரூ.1.14 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் ரூ.61.98 கோடியில் நடைபெறும் இரயில்வே மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்” எனக் கூறியுள்ளார்.