Skip to main content

முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு..! 

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

Case filed against former minister's aide ..!

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகரின் முன்னாள் நகர்மன்ற து.தலைவர், அ.தி.மு.க.வின் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற து.செ. உள்ளிட்ட பதவிகளை வகித்த முக்கியப் புள்ளி கண்ணன். சங்கரன்கோவில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான ராஜலட்சுமியின் அரசியல் ஆலோசகராகவும் இருப்பவர். நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் ராஜலட்சுமி 5354 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். 

 

கடந்த 10ம் தேதி அன்று சங்கரன்கோவில் நகரின் ராமசாமியாபுரம் தெருவில் குடிநீர் சரியாக வரவில்லை என அங்குள்ள மக்கள் நகராட்சிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அதையடுத்து நகராட்சிப் பணியாளர்கள் தண்ணீர் செல்கிற வால்வை சரிசெய்து கொண்டிருந்தார்கள். இந்தத் தகவல் கண்ணனுக்கும் போக, அவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் அங்கு வந்திருக்கிறார். அப்போது, அந்த தெருவில் ரோடு வசதி செய்து தரப்படவில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டத்திற்காக அங்குள்ளவர்களைத் திரட்ட அவர் முற்பட்டதாகத் சொல்லப்படுகிறது. அதற்கு மக்கள் வரவில்லை என தெரிகிறது.

 

இந்த நிலையில் தகவலறிந்த மற்றொரு தரப்பினர் அங்கே திரண்டு வந்திருக்கின்றனர். அவர்களோடு கண்ணன் பேசிக் கொண்டிருந்தபோது, இரண்டு தரப்பினருக்கிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு தரப்பிலும் வார்த்தைகள் முற்றி விவகாரமாகியிருக்கிறது. பதற்றச் சூழல் ஏற்படுவதைக் கண்ட கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அதே நேரத்தில் தி.மு.க.வின் நகரச் செயலாளரான சங்கரனும் ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்.

 

மக்கள் நடந்தது குறித்துக் கண்ணன் மீது நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, நகர தி.மு.க.வின் செயலர் சங்கரனும் கண்ணன் மீது புகார் செய்திருக்கிறார்.

 

இதனடிப்படையில் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார் காவல் நிலைய உதவி ஆய்வாளர்.

 

இதுகுறித்து நாம் கண்ணனை அலைபேசியில் தெடர்புகொண்ட போது, “நான் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். அப்போது ராமசாமியாபுரம் பகுதியில் குடிதண்ணீர் வரவில்லை என்று தெரிவித்தார்கள். அதை நான் சரிசெய்யும் பொருட்டு நகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டேன். அவர்களும் வந்து அதை சரிசெய்து கொண்டிருந்தனர். அதற்குள் கூட்டம் திரண்டுவிட்டது. அதுசமயம் நான் தகராறு செய்யவில்லை, யாரையும் அவதூறாகவும் பேசவுமில்லை” என்றார்.

 

 


 

 

சார்ந்த செய்திகள்