Skip to main content

”மோடிக்கு வர வேண்டிய கோபம், பழனிசாமிக்கு வருகிறது” - அமைச்சர் உதயநிதி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Anger that should come to Modi, comes to Palaniswami says Minister Udhayanidhi

திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் கரூர் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக மணப்பாறை பேருந்து நிலையம்  பெரியார் சிலை  அருகில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மணப்பாறை தொகுதி பொறுப்பாளர் சேகரன், மாவட்டக் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ்  சபியுல்லா குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானர் ஸ்டாலின்; யாருடைய காலிலும் விழுந்து முதல்வராகவில்லை. பெண்களுக்கு அனைத்து உரிமையையும் போராடி பெற்று தந்தவர் தந்தை பெரியார். பெண்களின் அனைத்து முன்னேற்றத்திற்கு முன்னோடியாக இருந்தவர் அண்ணா. அவரோடு வழியில் வழிவந்தவர் டாக்டர் கலைஞர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அளித்தவர். நம்முடைய முதல்வர் பெண்கள் பள்ளிக்கூடம் படித்ததோடு மட்டுமல்லாமல் உயர் கல்வி படிப்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தை அளித்தார். மாதம் ஆயிரம் வங்கிகளில் வரவு வைக்கப்படுகிறது.

மூன்று லட்சம் மாணவர்கள் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற்று உள்ளனர். மாணவர்களுக்கும் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்கிறவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பெற்றோர்களின் எண்ணம் அறிந்து வெறும் வயிற்றில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிற குழந்தைகளுக்கு முதலமைச்சர் தரமான காலை உணவு திட்டத்தை அளித்திருக்கிறார் நமது முதல்வர். இந்தியாவிலேயே முதல்முறையாக நமது மாநிலத்தில் தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 34,000 குழந்தைகள் இத்திட்டத்தினால் பயன்படுத்துகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மாதம் தகுதி படைத்த மகளிருக்கு ரூபாய் 1000 தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது போன்று இன்று ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு  வழங்கப்படுகிறது. சில மகளிருக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கு கண்டிப்பாக வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் மட்டும் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை பகுதியில் 66,000 மகளிருக்கு வழங்கப்படுகிறது.

மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார். அவரே சாப்பிட்டு விடுவார். அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள செல்ல பெயர் 29 பைசா. நாம் சரியாக ஒரு ரூபாய் கட்டுகின்றோம். அவர் நமக்கு தருகின்றது 29 பைசா மட்டுமே. பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாய் வழங்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு ரூபாய் நிதி கொடுத்தால், அவர்களுக்கு மூன்று ரூபாய் வழங்கப்படுகிறது. நமக்கு வெறும் 29 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. 10 வருடமாக நமது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற முதல்வர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வைக்கப்பட்ட ஒரே செங்கல் வைத்த ஒரு செங்கலையும் நான் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

பாரதிய ஜனதா ஆளுகின்ற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. ஆனால், தமிழகத்தில் இன்னும் வரவில்லை. இடி, சிபிஐ,  ஐடி, அதானி ஆகியோர் மோடியின் குடும்பம். நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறைகளையும் அதானி கையில் கொடுத்து விட்டார் உலக பணக்கார வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். அதானி ஏர்போர்ட், அதானி ரயில்வே ஸ்டேஷன், அதானி துறைமுகம், அதானி மின்சாரம் ஆகிய அனைத்தையும்  தூக்கிக் கொடுத்து விட்டார். மோடிக்கு வர வேண்டிய கோபம், பாதம் தாங்கி பழனிச்சாமிக்கு வருகிறது என்று பேசிய அவர், இன்னும் பல்வேறு சாதனைகளை கூறி கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதி மணிக்கு கை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

சார்ந்த செய்திகள்