Skip to main content

“அதிமுக செல்வாக்கை இழந்துவிட்டது; கொஞ்ச கொஞ்சமாகத்தான் வரும்” - கே.எஸ். அழகிரி

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

 'AIADMK has lost its influence; it will come little by little'-KS Alagiri

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''அண்ணாமலை விரக்தியோடு பேசுவதற்கு காரணம் உட்கட்சிப் பிரச்சனை தான். அதிமுகவோடு கூட்டு சேர மாட்டேன் என்று அவர் சொல்கிறார். ஆனால் வானதி சீனிவாசனும், தமிழக பாஜகவினுடைய பார்வையாளர் முரளிதர ராவ் அதிமுகவுடன் கூட்டு என்கிறார்கள். இதைவிட அண்ணாமலைக்கு மனக்கசப்பு உருவாக்கும் விஷயம் என்னவாக இருக்க முடியும்.

 

ஒரு தேர்தல் அறிக்கை என்பது ஐந்து ஆண்டுகளுக்கானது. ஆட்சிக்கு வந்த உடனே எல்லாவற்றையும் அறிவிக்க முடியாது. மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய முடியும். பொறுத்திருங்கள். தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதுதான் நியதி. நீங்கள் எங்கே எங்கே என்று கேட்டால் எப்படி வரும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வரும்.

 

அதிமுகவில் தனி மனிதர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். கொள்கை கிடையாது, லட்சியம் கிடையாது. மோடி 10 ஆண்டுகள் அவர்களை நசுக்கினார்கள். ஆனால் மோடிக்கு எதிராக அவர்கள் ஒரு பதில் கூட பேசத் தயாராக இல்லை. மாநிலத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டது. அதைக் கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. மண்டியிடுகிறார்கள், அச்சப்படுகிறார்கள். ஆனால் திமுக அரசு அப்படி இல்லை. மாநில உரிமைக்கு எதிராக செயல்பட்டால் உடனடியாக கேள்வி கேட்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள். பொதுவெளியில் போராடுகிறார்கள். மறுப்பு குரலை கொடுக்கிறார்கள். கண்டன குரல்கள் எழுப்புகிறார்கள். அதிமுகவிற்கு அதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் அதிமுக தனது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.