Skip to main content

வைஃபைலாம் வேண்டாம் ஒரு வாளி வைங்க போதும்! - வைஃபைக் குறித்து மக்கள் கருத்து.

Published on 01/09/2018 | Edited on 03/09/2018

ஆறு மாதங்களில் ஆறாயிரம் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செய்துதரப்படும் என்று ரயில்வே அமைச்சர் 'பியூஷ் கோயல்' அறிவித்து இருந்தார். இது தொடர்பாக நக்கீரன் தனது முகநூல் பக்கத்தில் 'ரயில்களில் மற்றும் ரயில் நிலையங்களில் வைஃபை வசதியைவிட அவசியமானதாக நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்ன?' என்று மக்களின் கருத்தை கேட்டது. அதற்கு மக்கள் தாங்கள் தினமும் எதிர்நோக்கும் பிரச்சனைகளுடன் உண்மை நிலவரத்தையும் பதிவு செய்தியிருக்கிறார்கள். அதில் மக்கள் அதிகமாக பதிவிட்ட கருத்துகள்.

 

rail

 

ரயில் பயணம் எப்போதுமே அழகானதும், அனுபவிக்கக்கூடியதுமானது, அதை நிச்சயம் நாம் அனைவருமே அனுபவித்து பயணித்திருப்போம். சில சமயங்களில் சிரமத்திற்கும் ஆளாகியிருப்போம் இருந்தும், ரயிலும் ரயில் பயணமும் இனிமையானதுதான். ஆனால் ரயில் ஏறுவதற்காக ரயில்நிலைய நடைமேடையில் காத்திருக்கும்போது நமக்கான பெட்டி எங்க வரும் என்று தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்துகொண்டு, சரியாக வேலை செய்யாத, (பெட்டி எண்களை காட்டும்) 'மின்னணு இண்டிகேட்டர்கள்' பார்த்து ஏமார்ந்து எப்படியோ ஒரு வழியாக ஏறிவிட்டால், அதன்பின்  இரவில் அந்த தண்டவாளத்தின் தாலாட்டுடன் உறங்கி, காலை ரம்மியமான சூரியக் கதிர்களை ஜன்னல் வழியே ரசிக்கும் வரை ரயில் பயணம் சொர்க்கம்தான். ஆனால், விழித்ததும், அவிழ்க்க வேண்டிய தருணத்தில் கழிவறையை நினைத்தால்தான் நரகத்தின் வாசலில் கால் வைப்பதுபோன்று தோன்றும். ஒன்று கழிவறை அசுத்தமாய் இருக்கும், அல்லது கழுவுவதற்கு தண்ணீர் இருக்காது, அப்படி அதுவும் இருந்துவிட்டால் வாளி இருக்காது, அதையும் தாண்டி வாளி இருந்துவிட்டால் அதை கைதியை போல் ஒரு சங்கிலியில் கட்டி வைத்திருப்பார்கள். சரி அது கைதியாய் இருந்தால் நமக்கென்ன நாம் சுதந்திரம் அடைவோமே என்றால், நம் அரசியல்வாதிகளிடம் சிக்கிய சில நேர்மையான அதிகாரிகள்போல் அதுவும் ஒரு எல்லை வரைத்தான் செயல்படும், எப்படியோ ஒருவழியாக 'சொப்பா' என்று வியர்த்து வெளி வந்தால், நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையம் எப்போது வரும் என்று தெரியாமல், 'ஒரு பத்து நிமிடத்திற்கு முன்னாடி அறிவிப்பு செய்தால் நிம்மதியாய் இருக்கலாமே' என்ற பதட்டத்தோடு நின்றிருந்தால் தண்ணீர் தாகம் உயிர் போகும், ஆனால் அவ்வளவு பெரிய ரயிலில் குடிக்க தண்ணீர் கிடைக்காது. 'சரி நமக்கு தண்ணி வேண்டாம், குழந்தைங்க அவங்க அம்மாகிட்ட பால் குடிக்கணும் அதுக்காவது ஒரு தனி இடம் இருக்கானு' பாத்தா அதுவும் இருக்காது. இதெல்லாம் முன்பதிவு செய்தும் பயணத்தில் திருப்தியில்லை என்று ஒரு கும்பல் ஓலமிடும் பதிவு என்றால், பல நாட்கள் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தும், அவசரத்திற்கும் எப்போது விடுப்பு கிடைக்கிறதோ அப்போது போய் குடும்பத்தை பார்க்கலாம் என்று வெள்ளிக்கிழமை இரவு, ரயில் வருவதற்கு முன்பிருந்து நான்கு மணி நேரம் காத்திருந்து, அடித்து புடித்து ரயில் ஏறுபவர்களுக்கு, 'பின் பக்கம் இரண்டு பெட்டி, முன் பக்கம் இரண்டு பெட்டியும்தான் இருக்கிறது'. இதை அதிகப்படுத்த மாற்றங்க என்று இன்னொரு கும்பல் கதறுகிறது. இதை எல்லாம் விடக்கொடுமை மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான சக்கர நாற்காலியும் கிடைப்பதில்லை, அது கிடைத்துவிட்டாலும் அதற்கு சரியான பாதை இருப்பதில்லை. இப்படியான பலவிதமான கருத்துகளை மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

இவையெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் குறை. புதிய திட்டங்கள் மிக, மிக அவசியம்தான், வரவேற்கப்பட வேண்டியதுதான், ஆனால் பழைய திட்டங்களில் உள்ள குறைகளையும் அதே ஈடுபாட்டோடும், கவனத்துடனும் எடுத்துக்கொள்ள வேண்டியது கடமை.

 

சார்ந்த செய்திகள்