டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் போராடி வரும் டெல்லியின் எல்லைப் பகுதிகளில், காவல்துறையினர் கான்க்ரீட் தடுப்புகள், முள்வேலிகள் உள்ளிட்ட பல்வேறு தடுப்புகளை எழுப்பி வருகின்றனர். மேலும் அங்கு காவல்துறையினர், தரையில் ஆணிகளையும் பதித்துள்ளனர். அங்கு இணையதள சேவையும் முடக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். அவர்களில் சிலர் விவசாயிகள் போராட்டத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, ஐநா மனித உரிமைகள் ஆணையம் விவசாயிகளின் போராட்டம் குறித்து, ‘மனித உரிமைகளுக்கு உரிய மரியாதையுடன் சமமான தீர்வுகளைக் கண்டறிவது மிக முக்கியம்’ எனத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம், "நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தில், அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஆணையங்களையும் மற்றும் போராட்டக்காரர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அமைதியாக கூடுவதற்கும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைகள் இணையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமைகளுக்கு உரிய மரியாதையுடன் சமமான தீர்வுகளைக் கண்டறிவது மிக முக்கியம்" எனக் கூறியுள்ளது.