Skip to main content

ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் போராட்டம்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி ஜிப்மர் நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஜிப்மர்  நிறுவனத்தில் அனைத்து வகையான பதிவேடுகளும் இனி இந்தி மொழியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

 

இந்த சுற்றறிக்கை இந்திய அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்றும்  கூறி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜிப்மர் மருத்துவ நிறுவனத்தின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; பதிவேடுகளை பராமரிப்பதில் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க , ம.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின.

 

அந்த வகையில் ஜிப்மர் நிர்வாகத்தின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசிய பேரியக்கம், தமிழர் களம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஊர்வலமாக வந்து ஜிப்மர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜிப்மர் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு நகலை தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் நகலை எரித்த நபர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்