
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாநில அளவிலான ஆசிரியர் பணியிடதேர்வில் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த தேர்வில், 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர் பணியிட தேர்வின் மூலம் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.
ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டதில், திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின. முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய துணைத் தலைவர் உட்பட அதன் உயர்மட்டத் தலைவர்கள் பலர் இந்த வழக்கில் சிக்கினர்.
இந்த முறைகேடுகல் தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குரூப் சி, குரூப் டி ஊழியர்கள் என 25,753 நியமனங்களைக் கடந்தாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டதாகக் கூறி மேற்கண்ட ஆசிரியர்கள், அவர்கள் வாங்கிய சம்பளத் தொகையைத் திருப்பியளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக மேற்கு வங்க அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, கடந்தாண்டு மே மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் நேற்று (03-04-25) வழங்கினர். அதில் அவர்கள் கூறியதாவது, “இந்த முழு தேர்வு செயல்முறையும் தீர்க்க முடியாத அளவுக்கு கறைபடிந்த ஒரு வழக்கு. ஆசிரியர் தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள், மோசடிகள் நடைபெற்றுள்ளன. ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். அதனால், நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும், ஊழியர்களின் சேவைகள் ரத்து செய்யப்படும். இருப்பினும், நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்கள், பல ஆண்டுகளாகப் பெற்ற சம்பளத்தை திருப்பித் தர வேண்டியதில்லை. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, மீண்டும் தேர்வை நடத்தி கறைபடியாத ஊழியர்களை நியமிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.