கடந்த 2018 ஆம் ஆண்டில், ஒரே பாலின ஈர்ப்பு காதல் என்பது குற்றமாகாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஒரே பாலின திருமணத்தை இந்தியாவில் தற்போது வரையில் உரிய முறையில் சட்டமாக்கப்படவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமணச் சான்றிதழின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஒரே பாலின ஜோடி, டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து அதனை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்ததோடு, இதேபோன்று ஒரே பாலின திருமணம் தொடர்பாக உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள பிற வழக்குகளையும் இணைத்து இதனுடன் ஒன்றாகவே விசாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து விளக்கமளிக்கவும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
மேலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், “ஒரே பாலின ஜோடிகள் திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது எனவும், அதேபோன்று ஒரே பாலின ஜோடிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பதையும் அனுமதிக்கக் கூடாது எனவும் குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஒரே பாலின ஜோடிகள் வளர்க்கக் கூடிய குழந்தைகளுக்கு பாலினம் குறித்த புரிதலும் அதன் முக்கியத்துவங்களும் குறித்து உரிய புரிதல் ஏற்படாமல் போக வாய்ப்பு உள்ளது எனவே அது அவர்களது வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளது.