
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (௦6.12.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும். அதாவது நிதிக் கொள்கைக் குழு 4:2 என்ற பெரும்பான்மையுடன் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5% ஆக வைத்திருக்க முடிவு செய்தது. நிலையான வைப்பு வசதி (SDF - Standing Deposit Facility) விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி (MSF - Marginal Standing Facility) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகவும் உள்ளது.
எனவே குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 11வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார். மேலும் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களும் மாற வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.