Skip to main content

அறிமுகமாகிறது புதிய டிஜிட்டல் கரன்சி; பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகளுக்கு வரி - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

nirmala sitharaman

 

2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை வருமாறு;

 

"பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்காக 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 ஆகிய திட்டங்கள் தொடங்கப்படும். 75 மாவட்டங்களில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் ஏற்படுத்தப்படும். 2022-23 நிதியாண்டில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 2.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிநவீன இ-பாஸ்போர்ட் திட்டம் அடுத்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். நவீன தொழில்நுட்பத்துடன் சிப் பொருத்திய இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும்.

 

மின்சார வாகனங்களில் பேட்டரிகளைச் சார்ஜ் செய்வதற்குப் பதில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளடங்கிய புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும். மின்சார வாகனங்களில் பிரத்யேக மையங்களில் பேட்டரியை மாற்றிக்கொள்வது தொடர்பாக திட்டம் கொண்டுவரப்படும்.  நில சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, ஒரு நாடு ஒரு பதிவு என்ற நடைமுறை கொண்டுவரப்படும். நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும். சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களில் மாநிலங்களையும் சேர்த்துக்கொள்ளும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படும். அனிமேஷன், கிராபிக்ஸ் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த, தேவைகளைப் பூர்த்தி செய்ய பேனல் அமைக்கப்படும். பொதுப்போக்குவரத்தில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலான தூய்மையான போக்குவரத்து திட்டம் கொண்டுவரப்படும்.

 

பாரத் நெட் திட்டத்தின் கீழ், 2025ஆம் ஆண்டிற்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி வழங்கப்படும். அனைத்து கிராமங்களையும் இ-சேவை மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு 19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் 280 கிலோவாட் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைக்குத் தேவையான பொருட்களில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும். அரசின் மூலதன செலவினங்களுக்காக 7.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும். கடந்தாண்டை காட்டிலும் மூலதன செலவினங்களுக்கு 35.4 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தவுள்ளது. 2023ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ஒரு லட்சம் கோடி ஒதுக்கபட்டுள்ளது.

 

அரசின் நிதிப்பற்றாக்குறை 6.4 சதவீதமாக குறையும். அரசின் வரவு 39.5 லட்சம் கோடியாகவும், வரவு 22.8 லட்சம் கோடியாகவும் இருக்கும். திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டு அவகாசம் அளிக்கப்படும்.  கூட்டுறவு அமைப்புகளுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15 சதவீதமாகக் குறைக்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் பி.எப் வரிச்சலுகைகள் வழங்கப்படும். பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30 சதவீத வரி விதிக்கப்படும்". இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்