Skip to main content

“பா.ஜ.க.வின் சதியை இந்தியா கூட்டணி முறியடித்துள்ளது” - ராகுல் காந்தி

Published on 03/02/2024 | Edited on 04/02/2024
Rahul Gandhi says India alliance has foiled BJP's conspiracy

ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை, ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு (02-02-24) அன்று பதவியேற்றுள்ளார்.

இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்டமான பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம், மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. அந்த வகையில் அவரது யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் இன்று (03-02-24) நுழைந்துள்ளது.  

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பாஜக அரசு சீர்குலைக்க முயன்றது. ஆனால், இந்தியா கூட்டணி அதை எதிர்த்து நின்று பாஜகவின் சதியை முறியடித்தது. பணபலம் மற்றும் விசாரணை அமைப்புகளை பாஜக தன்வசம் வைத்திருந்தாலும் அதைக் கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சப் போவதில்லை” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்