Skip to main content

காவு வாங்கிய மேகதாது; பரிதாபமாக பறிபோன 5 உயிர்கள்

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Meghadatu bought by Kau; 5 lives were tragically lost

பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மேகதாது பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கோடை விடுமுறை என்பதால் நீர் நிலைகளில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் குளிப்பதற்காக படையெடுத்து வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 12 மாணவ மாணவிகள் ராம்நகர் மாவட்டம் மேகதாது பகுதிக்கு இன்று காலை சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு காவிரி ஆற்றங்கரையில் 12 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது நேஹா என்ற மாணவி உட்பட ஐந்து மாணவ மாணவிகள் நீர் சுழலில் சிக்கிக் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுழலில் சிக்கி உயிரிழந்த ஐந்து மாணவ மாணவிகளின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கரைப் பகுதியில் சடலங்கள் கிடைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்கப்பட்ட சடலங்கள் கனகபுரா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக சாத்தனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் முதலில் நீர் சுழலில் ஒரு மாணவன் சிக்கிக்கொண்ட நிலையில் அவரை மீட்பதற்காக இறங்கிய மாணவர்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நான்கு பேர் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தது தெரியவந்தது. சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்